ஹஜ் மற்றும் உழ்ஹிய்யாவின் சட்டங்கள்

ஹஜ் மற்றும் உம்ராவின் சட்டங்கள், அல் இஹ்ராம், இஹ்ராமின் வாஜிப்கள், சுன்னத்துக்கள், இஹ்ராம் நிய்யத்துடன் ஏனைய ஆடைகளை கலைவது வாஜிப் ஆகும்

ஹஜ் மற்றும் உழ்ஹிய்யாவின் சட்டங்கள்   தலைப்பு
< தமிழ் >
        


நூல்ஆசிரியர்
 அஷ் ஷெய்க் அப்துல்லாஹ் அல் கர்ஆவி


மொழி பெயர்ப்பாளர்
அஷ் ஷெய்க் முஹம்மத் மக்தூம்

மீளாய்வு செய்தவர்
முஹம்மத் அமீன்


أحكام الحج والأضحية
< تاميلية >
        

اسم المؤلف
الشيخ عبد الله القرعاوي



ترجمة:
محمد مخدوم بن عبد الجبار
مراجعة:
محمد أمين


بسم الله الرحمن الرحيم
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திரு நாமத்தால் ஆரம்பம் செய்கின்றேன்
முன்னுரை
நாட்கள் மற்றும் மாதங்கள் மத்தியில் ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்திய எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தாகும். அவன்தான் ஹஜ்ஜை இஸ்லாத்தின் முக்கிய கடமைகளில் ஒன்றாக ஏற்படுத்தினான். அவனை துதித்து நன்றி செலுத்துகிறேன். ஏனெனில் பல்வேறு அருட் பாக்கியங்களை நமக்கு வழங்கியுள்ள இறைவனுக்கு நன்றி செலுத்துவது எம் அனைவரின் மீதும் கடமையாகும்.
அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்கு தகுதி மிக்க எவரும் இல்லை என சாட்சி கூறுகிறேன். அவன் தனித்தவன், இணை துணை அற்றவன், பரிசுத்த மிக்கவன், சாந்தியையும், சமாதானத்தையும் நிலை நிறுத்துபவன் என உறுதி அளிக்கின்றேன்.
மேலும் முஹம்மத் (ஸல் லல்லாஹு அலை ஹி வஸல்லாம்) அவர்கள் அல்லாஹ்வின் அடிமையும், துதருமாவார் என்றும் சான்று பகர்கிறேன். அவர்கள் தான் புனிதமிக்க ஹஜ் மற்றும் உம்ரா கடமைகளை சரி வர நிறைவேற்றியவர்கள். அதனை கற்றுத் தந்தவர்கள். மகாமு இப்ராஹிமுக்குப் பின் நின்று தொழுதவர்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் மீதும், அவர்களின் குடும்பத்தார், தோழர்கள், அவர்கள் வழி சென்ற சிறந்த மார்க்க அறிஞர்கள், அவர்களின் வழி முறைகளை பின்பற்றி ஒழுகும் அனைவர்கள் மீதும் என்றென்றும் சலவாத்தும், சலாமும் சொல்லி அருள்வானாக. அவர்களின் காரியங்களில் பரகத் செய்தருள் வானாக.
ஹஜ் என்பது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக விளங்குகிறது; இறைவன் விதித்துள்ள மிக முக்கியமான மார்க்க கடமையுமாகும். வயது வந்த சக்தி பெற்றுள்ள ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் அந்த கடமையை நிறைவேற்றுவது கடமையாகும். அது தொடர்ப்பிலான மார்க்க சட்டங்களை கற்றுக் கொள்வதும் அவர் மீதுள்ள பொறுப்பாகும்.
இறைத் தூதர் (ஸல் லல்லாஹு அலை ஹி வஸல்லாம்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்.
«خذوا عني مناسككم»
“உங்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றும் முறையை என்னிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள்” . அறிவிப்பவர் : ஜாபிர் (ரழி யல்லாஹு அன்ஹு) , நூல் : பைஹகி.
மேலும்,
«من حج فلم يرفث ولم يفسق، رجع من ذنوبه كيوم ولدته أمه»
“மோசமான காரியங்கள் மற்றும் பாவமான செயல்களில் ஈடுபடாமல் ஒருவன் அல்லாஹ்வுக்காகவே ஹஜ் செய்தால் அவன் அவனது தாய் அவனைப் பெற்றெடுத்த நாளில் இருந்ததைப் போன்று (பாவமறியாத பாலகனாக) திரும்புவான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல் லல்லாஹு அலை ஹி வஸல்லாம்)அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) , நூல் : புகாரி
இறைத் தூதர் முஹம்மத் (ஸல் லல்லாஹு அலை ஹி வஸல்லாம்) அவர்கள் மேலே சுட்டிக் காட்டியுள்ள உயரிய நன்மைகளை அடைந்து கொள்வதற்கு, ஹஜ் புனித கடமையின் சட்ட திட்டங்களை முறையாக கற்றறிந்து, இக்லாஸ் எனும் மனத் தூய்மையுடன், இறைத் தூதர் லல்லாஹு அலை ஹி வஸல்லாம்) அவர்களின் வழிமுறையை முறையாக பின்பற்றி நிறை வேற்றுவது  அவசியமாகும்.
எனது முஸ்லிம் சகோதரர்கள் இந்த உயரிய வணக்கத்தை சரியான வழி முறையில் நிறைவேற்ற கற்றுக் கொள்ள வேண்டும் எனும் எண்ணத்தில், எனது ஆசான் அஷ் ஷெய்க்  அப்துல்லாஹ் பின் இப்ராஹீம் அல் கர்ஆவி அவர்கள் தொகுத்துள்ள ஹஜ்ஜின் சட்ட திட்டங்கள் தொடர்ப்பிலான கை நூலை வெளியிட முன் வந்தேன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் எமது காரியங்கள் அனைத்தையும் நல்லதாகவும், தூய்மையான தாகவும் ஆக்கி அருள்வானாக. அவன் எமது பிரார்த்தனைகளை செவியேட்பவனாகவும், எமக்கு மிகவும் நெருக்கமானவனாகவும் இருக்கின்றான்.
மாணவர் ஒருவர்
அல் கஸீம், புரைதாஹ்
********************

 


بسم الله الرحمن الرحيم
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திரு நாமத்தால் ஆரம்பம் செய்கின்றேன்
சக்தி பெற்றவர்கள் அவனது வீட்டிற்கு சென்று ஹஜ் கடமையை நிறை வேற்றுவதை கடமையாக்கிய அந்த அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் சொந்தம். அந்த ஹஜ் கடமையை இஸ்லாத்தின் அடிப்படை கடமைகளில் ஒன்றாக ஆக்கிய இறைவன், மோசமான காரியங்கள் மற்றும் பாவமான செயல்களில் ஈடுபடாமல் ஹஜ் கடமையை நிறை வேற்றுவோரின் பாவங்கள், தீய செயல்கள் அனைத்தையும் மன்னித்து விடுகிறான். அவனின் வீட்டுக்கு வந்து அவனை மாத்திரம் அழைத்து, வணங்குகின்றவர்கள் மீது அவனது அருளை பொழியும் கருணை மிக்கவனாக இருக்கின்றான். அவன் தான் அனைத்து படைப்பினங்களையும் படைத்து, அனைத்தையும் திட்டமிட்டு செயல் படுத்துகின்றான். கடமைகளை விதித்ததோடு, அவற்றை இலகுவானதாக ஆக்கினான்.
அவனை நான் துதிக்கின்றேன். அவன் தான் நாடியவர்களை அவனின் திருப் பொருத்தத்தின் பால் வழி காட்டினான். அதற்கான காரியங்கள் அனைத்தையும் அவர்களுக்கு இலகு படுத்தி கொடுத்தான்.   அவன் விரும்பாதவர்களுக்கு அவனின் திரு பொருத்தத்தை தடுத்து வைத்தான். அவர்களுக்கு எந்த உபதேசங்களோ, அறிவுரைகளோ பலன் தருவதில்லை.
அவனை புகழ்கின்றேன் அவனுக்கு நன்றியும் செலுத்துகிறேன். வணக்கத்துக்கு தகுதி மிக்கவன் அவனைத் தவிர எவரும் இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை துணை இல்லை, அவன் அனைத்தையும் அறிந்த அகிலத்தின் அரசனாவான் என்று நான் சாட்சி கூறுகிறேன்.
முஹம்மத் (ஸல் லல்லாஹு அலை ஹி வஸல்லம்) அவர்கள் அல்லாஹ்வின் அடிமையும், தூதரு மாவார்கள் என்றும், ஹஜ் கடமையை முறையாக நிறைவேற்றியவர் என்றும், அல்லாஹ்வை அஞ்சி வழிப்பட்டவர்களில் சிறந்தவர் என்றும் நான் சாட்சி கூறுகிறேன்.
இறைவா! உனது அடியாரும், தூதருமாகிய முஹம்மத் (ஸல் லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தார்கள், தோழர்கள், அவர்களை மறுமை நாள் வரை சரி வர பின்பற்றியவர்கள் அனைவர் மீதும் சலவாத்தும் , சலாமும் சொல்லி அருள் வாயாக. அவர்கள் அனைவர் மீதும் பரகத் செய்து அருள் வாயாக.
ஹஜ் என்பது இஸ்லாத்தின் பிரதான கடமைகளில் ஒன்றாகும். அதன் முக்கிய தூனுமாகும்.
ஹஜ் கடமை என்பது, நிர்ணயிக்கப் பட்ட காலப் பகுதியில் அல்லாஹ்வின் புனிதமிக்க இல்லத்தை நோக்கிச் சென்று விசேடமான வணக்கங்களை நிறை வேற்றுவதாகும்.
நிர்ணயிக்கப் பட்ட காலங்களில், நிர்ணயிக்கப் பட்ட எல்லையை கடப்பதற்கு முன்னர் ஹஜ் கடமைக்கான நிய்யத் வைப்பது அவசியமாகும்.
ஷவ்வால், துல் கஃதா, மற்றும் துல் ஹஜ் மாதத்தின் ஆரம்ப பத்து நாட்கள் என்பனவே ஹஜ் வணக்கத்துக்காக நிர்ணயிக்கப் பட்ட காலங்கள் ஆகும்.
துல் ஹுளைஃபா, அல் ஜுஹ்ஃபா, கர்னுல் மனாஸில் (அஸ் செய்லுள் கபீர் என்றும் இதற்கு கூறப்படும்), யலம்லம், தாது இர்க் ஆகிய மக்காவை சூழ உள்ள இடங்களே ஹஜ் வணக்கத்துக்காக நிர்ணயிக்கப் பட்ட எல்லைகளாகும்.
ஹஜ் மற்றும் உம்ரா கடமைகளை நிறை வேற்றுவோர் அல்லாஹ்வின் இல்லத்தின் உயர்வையும், மதிப்பையும் பேணி அல்லாஹ்வை மேன்மை படுத்தியவர்களாகவும், அடிப் பணிந்த வர்களாகவும், தாழ்மையுடனும், பயபக்தியுடனும் மேற்படி எல்லைகளை கடந்து செல்ல வேண்டும் என்பதற்காகவே அந்த எல்லைகள் நிர்ணயிக்கப் பட்டுள்ளன.
பருவ வயதை அடைந்த அனைத்து ஆண்கள் மற்றும் பெண்கள் மீதும், ஹஜ் கடமையை நிறை வேற்ற சக்தி பெற்றிருந்தால்  வாழ் நாளில் ஒரு முறை அதனை நிறை வேற்றுவது கடமையாகும்.
இதனையே இறைவன் அல் குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிடுகிறான்.
وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ عَنِ الْعَالَمِينَ [آل عمران: 97].
எவர்கள் அங்கு யாத்திரை செல்ல சக்தி உடையவர்களாக இருக்கின்றார்களோ, அத்தகைய மனிதர்கள் மீது அல்லாஹ்வுக்காக (அங்கு சென்று) அவ்வீட்டை ஹஜ் செய்வது கடமையாகும். எவரேனும் (இதை) நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் ஒன்றும் குறைந்து விடுவ தில்லை; ஏனெனில்) - நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோ (அனைவ)ரை விட்டும்  தேவையும் அற்றவனாக இருக்கின்றான். (ஆல் இம்ரான் 97)
قال صلى الله عليه وسلم : «بني الإسلام على خمس ـ وذكر فيها ـ وحج البيت» متفق عليه.
இஸ்லாம் ஐந்து தூண்களின் மீது கட்டி எழுப்பப் பட்டுள்ளது என்று கூறிய இறைத் தூதர் (ஸல் லல்லாஹு அலை ஹி வஸல்லம்) அவர்கள் , ஹஜ் வணக்கத்தையும் அதில் குறிப்பிட்டார்கள். (புகாரி, முஸ்லிம்)
மனிதர்களில் பலர், ஹஜ் கடமையான பிறகும் மார்கத்தில் அனுமதிக்கப் பட்ட எந்த காரணமும் இன்றி அதனை பிற்போடுவதை அவதானிக்கின் றோம், இவர்கள் தமது பிள்ளைகளுக்கு கூட கால தாமதம் இன்றி அதனை அவசரமாக நிறைவேற்ற அனுமதி வழங்குவதில்லை.
ஹஜ் கடமையை நிறைவேற்ற சக்தி பெற்றிருந்தும் அதனை நிறைவேற்றாது ஒருவர் மரணித்து விட்டால் பாவியாக மாறி விடுவார்.
இறைத் தூதர் (ஸல் லல்லாஹு அலை ஹி வஸல்லம்) அவர்கள் பின் வருமாறு கூறினார்கள் ,
«يا أيها الناس قد فرض الله عليكم الحج فحجوا» رواه مسلم.
மனிதர்களே! இறைவன் உங்கள் மீது ஹஜ் கடமையை விதித்துள்ளான். எனவே (உடனே) அந்த ஹஜ் கடமையை நிறைவேற்றுங்கள் என இறைத் தூதர் (ஸல் லல்லாஹு அலை ஹி வஸல்லம்) அவர்கள் பணித்தார்கள். ஆதாரம் : முஸ்லிம்
இந்த ஹதீஸில் உடனடியாக ஹஜ் கடமையை நிறைவேற்றுமாறு இறைத் தூதர் (ஸல் லல்லாஹு அலை ஹி வஸல்லம்) அவர்கள் கட்டளை இட்டுள்ளார்கள். எனவே ஹஜ் மற்றும் உம்ரா கடமைகள் உடனடியாக நிறை வேற்றப் பட வேண்டும்.
ஹஜ் கடமை வாழ் நாளில் ஒரு முறையே நிறைவேற்றப் பட வேண்டும்.
روى ابن عباس رضي الله عنهما قال: خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال: «يا أيها الناس كتب عليكم الحج» قال: فقام الأقرع بن حابس فقال: أفي كل عام يا رسول الله؟ فقال: «لو قلتها لوجبت، ولو وجبت لم تعملوا بها، ولم تستطيعوا أن تعملوا بها، الحج مرة، فمن زاد فهو تطوع» رواه أحمد وغيره. وأصله في مسلم من حديث أبي هريرة رضي الله عنه.   
இப்னு அப்பாஸ் (ரழி யல்லாஹு அன்ஹு) அவர்கள் பின் வருமாறு அறிவிக்கின்றார்கள்.
இறைத் தூதர் (ஸல் லல்லாஹு அலை ஹி வஸல்லம்) அவர்கள் (ஒரு சந்தர்பத்தில்) குத்பா பேருரை நிகழ்த்தும் போது, மனிதர்களே! இறைவன் உங்கள் மீது ஹஜ் கடமையை விதியாக்கி உள்ளான் என்று கூறினார்கள். அப்போது அக்ராஃ பின் ஹாபிஸ் (ரழி யல்லாஹு அன்ஹு) அவர்கள் எழுந்து நின்று இறைத் தூதர் அவர்களே! அதனை ஒவ்வொரு வருடமும் நிறை வேற்ற வேண்டுமா? என வினவினார்கள். அதற்கு இறைத் தூதர் (ஸல் லல்லாஹு அலை ஹி வஸல்லம்) அவர்கள் நான் ஆம் என்றால் அது (ஒவ்வொரு வருடமும்) கடமை ஆகி விடும். அவ்வாறு நீங்கள் நிறைவேற்ற மாட்டீர்கள். அதற்கு நீங்கள் சக்தி பெறவும் மாட்டீர்கள். ஹஜ் வாழ் நாளில் ஒரு முறை தான் நிறை வேற்ற வேண்டும். அதற்கு மேலதிகமாக யாராவது நிறை வேற்றினால் அது உபரியானதாக கருதப் படும் என்று பதில் அளித்தார்கள். ஆதாரம் : அஹ்மத் , முஸ்லிம்
வசதி இருந்தால் ஒவ்வொரு வருடமும் ஹஜ் வணக்கம் செய்வது சுன்னத் ஆகும். அதனை தவறாக கருத முடியாது. அதனை நிறை வேற்ற வேறொருவரை பொறுப்பாக நியமிக்கவும் முடியும்.
عن عبد الله بن مسعود رضي الله عنه، أن رسول الله صلى الله عليه وسلم قال: «تابعوا بين الحج والعمرة، فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكير خبث الحديد والذهب والفضة، وليس للحجة المبرورة ثواب إلا الجنة، وما من مؤمن يظل يومه محرمًا إلا غابت الشمس بذنوبه» رواه الترمذي بهذا اللفظ وهو حديث صحيح بشواهده.
நீங்கள் ஹஜ் கடமையை நிறை வேற்றினால் உம்ராவையும் நிறை வேற்றுங்கள். ஏனெனில் கொல்லனில் உலை இரும்பு, தங்கம், வெள்ளி ஆகிவற்றின் துருவை நீக்கி விடுவது போன்று ஹஜ் மற்றும் உம்ரா கடமைகள் ஏழ்மையையும், பாவத்தையும் போக்கி விடுகின்றன.  அங்கீகாரம் பெற்ற ஹஜ்ஜுக்கு சுவனத்தைத் தவிர வேறு உயர்ந்த கூலி கிடையாது. பகல் வேளையில் இஹ்ராமுடன் இருக்கும் ஒரு மனிதன் மாலைப் பொழுதை அடையும் போது அவனது அனைத்து பாவங்களும் மன்னிக்கப் பட்டு விடும் என இறைத் தூதர் (ஸல் லல்லாஹு அலை ஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரழி யல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நூல்: திர்மிதி
عن عائشة رضي الله عنها قالت : قلت يا رسول الله نرى الجهاد أفضل العمل، قال : «لكن أفضل الجهاد حج مبرور». وفي رواية : «لكن أحسن الجهاد وأجمله الحج، حج مبرور». قالت عائشة : «فلا أدع الحج بعد إذ سمعت هذا من رسول الله صلى الله عليه وسلم». رواه البخاري.
ஆஇஷா (ரழி யல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிக்கின்றார்கள்,
நான் இறைத் தூதர் (ஸல் லல்லாஹு அலை ஹி வஸல்லம்) அவர்களிடம், அலாஹ்வின் தூதரே! ஜிஹாதை தான் நாம் சிறந்த அமலாக கருதுகிறோம் என்று கூறினேன். அதற்கு அவர்கள், ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜே சிறந்த ஜிஹாத் என்று பதில் கூறினார்கள். பிறிதோர் அறிவிப்பில், ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ் வணக்கமே சிறந்த மற்றும் அழகிய ஜிஹாத் ஆகும் என வந்துள்ளது. இதனை நான் இறைத் தூதர் (ஸல் லல்லாஹு அலை ஹி வஸல்லம்) அவர்களிடம் இருந்து கேட்டதில் இருந்து ஹஜ் வணக்கத்தை விட்டு விடுவதில்லை என ஆஇஷா (ரழி யல்லாஹு அன்ஹா) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : புகாரி
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لنسائه عام حجة الوداع : «هذه ثم ظهور الحصر». فكن كلهن يحججن إلا زينب بنت جحش، وسودة بنت زمعة وكانتا تقولان: والله لا تحركنا دابة بعد أن سمعنا ذلك من النبي صلى الله عليه وسلم . رواه أحمد.
இறுதி ஹஜ்ஜின் போது இறைத் தூதர் (ஸல் லல்லாஹு அலை ஹி வஸல்லம்) அவர்கள் தமது மனைவி மார்களிடம், இது உங்கள் கடமையான ஹஜ்ஜாகும். இதன் பிறகு (வேறு கடமையான ஹஜ் உங்கள் மீது கிடையாது) எனவே நீங்கள் வீடுகளில் இருந்து விடுங்கள் (ஹஜ்ஜுக்காக செல்லாதீர்கள்) என கூறினார்கள். (இதனைக் கேட்டப் பிறகும்) சைனப் பின்த் ஜஹ்ஷ் மற்றும் சவ்தாஹ் பின்த் சம்ஆ (ரழி யல்லாஹு அன்ஹுமா) ஆகியோரை  தவிர ஏனைய நபிகளாரின் மனைவி மார்கள் அனைவரும் மேலதிக ஹஜ் கடமைகளை நிறைவேற்றி உள்ளார்கள். நபி (ஸல் லல்லாஹு அலை ஹி வஸல்லம்) அவர்களிடம் இருந்து இதனை செவியுற்றப் பிறகு எந்த ஹஜ் பயணங்களும் நாம் செல்லவில்லை என அவ்விருவரும் கூறுபவர்களாக இருந்தார்கள்.
இந்த ஹஜ்ஜுக்குப் பிறகு வேறு ஒரு ஹஜ் அவர்கள் மீது கடமையில்லை என்பதையே மேற்கண்ட ஹதீஸ் தெளிவு படுத்துகின்றது. மேலதிகமாக ஹஜ் கடமை நிறை வேற்றக் கூடாது என்று தடை விதிக்கப் பட வில்லை.
روى البخاري أن عمر رضي الله عنه أذن لأزواج النبي صلى الله عليه وسلم في آخر حجة حجها، فبعث معهن عثمان بن عفان وعبد الرحمن بن عوف.
உமர் (ரழி யாழ்லாஹு அன்ஹு) அவர்கள் தாம் செய்த இறுதி ஹஜ்ஜின் போது நபி (ஸல் லல்லாஹு அலை ஹி வஸல்லம்) அவர்களின் மனைவிமார்களுக்கும் ஹஜ் செய்ய அனுமதி வழங்கினார்கள்; அவர்களுக்கு துணையாக உஸ்மான் பின் அப்பான், அப்துர் ரஹ்மான் பின் அவ்ப் (ரழி யல்லாஹு அன்ஹுமா) ஆகிய நபித் தோழர்களையும் அனுப்பி வைத்தார்கள் எனும் செய்தியை இமாம் புகாரி பதிந்து வைத்துள்ளார்.
أخرج ابن سعد من حديث أبي هريرة فكن - نساء النبي صلى الله عليه وسلم - يحججن إلا سودة وزينب فقالتا، لا تحركنا دابة بعد رسول الله صلى الله عليه وسلم ، وكان عمر متوقفًا في ذلك ثم ظهر له الجواز فأذن لهن وتبعه على ذلك من في عصره من غير نكير.
சைனப் பின்த் ஜஹ்ஷ் மற்றும் சவ்தாஹ் பின்த் சம்ஆ (ரழி யல்லாஹு அன்ஹுமா) ஆகியோரை  தவிர ஏனைய நபிகளாரின் மனைவிமார்கள் அனைவரும் மேலதிக ஹஜ் கடமைகளை நிறைவேற்றி உள்ளார்கள். நபி (ஸல் லல்லாஹு அலை ஹி வஸல்லம்) அவர்களிடம் இருந்து இதனை செவியுற்றப் பிறகு எந்த ஹஜ் பயணங்களும் நாம் செல்லவில்லை என அவ்விருவரும் கூறுபவர்களாக இருந்தார்கள் என்ற செய்தியை அபூ ஹுரைரா (ரழி யல்லாஹு அன்ஹு) அவர்களின் வாயிலாக அறிவித்த அறிஞர் இப்னு ஸஃத், மேலதிக ஹஜ் செய்யக் கூடாது என்ற இதே கருத்தையே ஆரம்பத்தில் உமர்  (ரழி யல்லாஹு அன்ஹு) அவர்களும் கொண்டிருந்த போதிலும், பிறகு மேலதிக ஹஜ் செய்வதை ஆகுமானதாக கருதிய அவர்கள், நபி (ஸல் லல்லாஹு அலை ஹி வஸல்லம்) அவர்களின் மனைவிமார்களுக்கு அனுமதி வழங்கினார்கள், அதற்கு அவர்களின் காலத்தில் வாழ்ந்த நபித் தோழர்கள் யாரும் மறுப்பு தெரிவிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
وروى أحمد والنسائي، عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: «جهاد الكبير، والصغير، والضعيف، والمرأة، الحج والعمرة» سنده جيد.
ஹஜ் மற்றும் உம்ரா வணக்கங்கள் முதியோர், சிறுவர்கள், பலகீனமானவர்கள், பெண்கள் ஆகியோரின் ஜிஹாத் ஆகும் என இறைத் தூதர் (ஸல் லல்லாஹு அலை ஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைராஹ் (ரழி யல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நூல்: அஹமத், நஸாஈ
இதன் அர்த்தம், வயோதிபம், சிறுமை, பலகீனம், பெண்மை போன்ற ஏதேனும் ஒரு காரணத்தினால் பல்வேறு சிரமங்களுடன் ஹஜ் கடமையை நிறை வேற்றுவோருக்கு இறைவன் ஜிஹாதுடைய நன்மைகளை வழங்குகிறான் என்பதாகும். இறைவனே நன்கறிந்தவன்.
ஒவ்வொரு நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஹஜ் செய்வது சுன்னத் ஆகும் என்பதற்கு பின் வரும் நபி மொழிகள் ஆதாரமாக உள்ளன.
قال النبي صلى الله عليه وسلم : «يقول الله عز وجل : إن عبدًا صححت له جسمه، ووسعت عليه في المعيشة، تمضي عليه خمسة أعوام، لا يفد إلي، لمحروم» رواه ابن حبان في صحيحه، وأبو يعلى، والبيهقي.
 ஒரு அடியானுக்கு நான் ஆரோக்கியமான உடலை வழங்கி, அவனது வாழ்வில் நான் அபிவிருத்தி செய்திருந்தும், (அவன் ஹஜ் செய்து) ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டப் பிறகும் அவன் (ஹஜ் கடமைக்காக) என்னிடம் வரவில்லை என்றால் அவன் பாக்கியம் இழந்தவன் ஆகி விடுவான் என இறைவன் கூறுவதாக இறைத் தூதர் (ஸல் லல்லாஹு அலை ஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : இப்னு ஹிப்பான், பைஹகி
ورواه الطبراني في الأوسط بلفظ: «إن الله يقول: إن عبدًا صححت له بدنه، وأوسعت عليه في الرزق، لم يفد إلي في كل أربعة أعوام، لمحروم» قال: في مجمع الزوائد: ورجال الجميع رجال الصحيح.
ஒரு அடியானுக்கு நான் ஆரோக்கியமான உடலை வழங்கி, அவனது வாழ்வில் நான் இரண விருத்தி செய்திருந்தும்  (அவன் ஹஜ் செய்து) நான்கு ஆண்டுகள் கடந்து விட்டப் பிறகும் அவன் (ஹஜ் கடமைக்காக) என்னிடம் வரவில்லை என்றால் அவன் பாக்கியம் இழந்தவனாக மாறி விடுவான் என இறைவன் கூறுவதாக இறைத் தூதர் (ஸல் லல்லாஹு அலை ஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் :
அல்லாஹ்வே நன்கறிந்தவன்,
இறைவன் எங்கள் நபி முஹம்மத் (ஸல் லல்லாஹு அலை ஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தார்கள், தோழர்கள் மீதும் சலவாத்தும், சலாமும் சொல்லி அருள் வானாக.
அப்துல்லாஹ் பின் இப்ராஹீம் அல் கர்ஆவி
ஹஜ் வணக்கத்தின் பலன்கள்
அல்லாஹ்வின் நல்லடியார்களே!
நீங்கள் ஹஜ் கடமையை நிறை வேற்றும் பொருட்டு இறைவன் உங்களை புனிதமிக்க பூமியில் அமைந்துள்ள சங்கை மிக்க இல்லத்திற்கு சிறப்புகள் நிறைந்த மாதத்தில் அழைத்துள்ளான்.
பல்வேறு பாக்கியங்களை நன்மைகளை அடைந்து கொள்வதற்காகவே அவன் ஹஜ் கடமையை விதியாக்கி உள்ளான். இதனையே அல் குர்ஆன் பின்வருமாறு தெளிவு படுத்துகிறது.
قال تعالى :  لِيَشْهَدُوا مَنَافِعَ لَهُمْ[الحج: 28].
தங்களுக்குரிய பலன்களை அடைவதற்காகவும்;  (ஹஜ்ஜுக்காக மக்களை அழைப்பீராக) 22;28
அவ்வாறு ஹஜ்ஜின் மூலம் நாம் அடைந்து கொள்ளும் பலன்களில், இந்த உலகில் நாம் அடைந்து கொள்ளும் பலன்களும் உள்ளன. அவ்வாறே மறு உலகில் நாம் அடைந்து கொள்ளும் பலன்களும் உள்ளன.
உளத் தூயம், பாவப் பரிகாரம், பாவங்கள் மன்னிக்கப் படுகின்றமை என்பன மறு உலக பயன்களில் உள்ளவையாகும். எந்த விதமான உலக நோக்கங்களும் இன்றி, பெருமைக்காகவோ, முகஸ்துதிக்காகவோ, பெயருக்கும், புகழுக்கு மாகவோ அன்றி, தனது ஹஜ் கடமையை நிறை வேற்றும் போது முற்றிலும் அல்லாஹ்வை பயந்து, அவனது கட்டளைக்கு அடி பணிந்து, பாவங்கள், வீண் செயல்கள் மற்றும் வீண் தர்க்கங்களில் இருந்து தவிர்ந்து, அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தையும், அவனின் நெருக்கத்தை யுமே முற்றிலும் நோக்கமாகக் கொண்டு ஒருவன் ஹஜ் கடமையை நிறை வேற்றும் போது மறு உலகில் இறைவன் தயார் படுத்தி உள்ள பலன்களை அடைந்து கொள்வான். இதற்கு மாற்றமாக உலக நோக்கங்களுக் காகவும், பெயருக்கும், புகழுக்கும் ஒருவன் ஹஜ் கடமையை நிறை வேற்றினால் அவனது அமல்கள் அனைத்தும் பாலாகி விடும் எந்த விதமான மறு உலக பயன்களையும் அடைந்து கொள்ள மாட்டான்.
அரபா மைதானத்தில் வணக்கங்களில் ஈடு பட்டு உள்ள தனது அடியார்களை வானவர்களிடம் பெருமையாக இறைவன் நினைவு கூறுவதும் ஹஜ் யாத்திரிகர்கள் அடைந்து கொள்ளும்   பயன்களில் உள்ளவை யாகும்.
உலகின் பல்வேறு பாகங்களில் இருந்து வந்துள்ள பல தரப் பட்ட மக்கள், ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் ஒரே விதமான அமல்களை ஒற்றுமை யுடன் நிறை வேற்றுவ தும் ஹஜ்ஜின் பலன்களில் உள்ளவையாகும்.
அல்லாஹ்வின் பால் மக்களை அழைப்பதற்கும், ஏகத்தின் பால் மக்களை நெறிப்படுத்துவதற்கும், இணை வைப்பதில் இருந்து மக்களை தடுப்பதற்கும் நல்லதை ஏவி, தீமையை தடுப்பதற்கும் பலர் இந்த பயணத்தை பயன் படுத்திக் கொள்கின்றமை கண் கூடானதாகும்.
ஹஜ்ஜின் நோக்கம் ஏகத்துவம்
ஹஜ்ஜின் உயர்ந்த நோக்கம் சொல், செயல், நம்பிக்கை ஆகியவற்றில் ஓரிறை கொள்கையை நிலை நிறுத்துவதாகும்.
ஹஜ்ஜுக்காகவோ, உம்ராவுக்காகவோ ஒருவர் நிய்யத் செய்து விட்டால் இறைவன் ஒருவன் தான், அவனுக்கு இணை துணை இல்லை, ஆட்சி அதிகாரங்களுக்கு சொந்தக்காரன் அவன் தான், அனைத்து புகழும் அவனுக்கே சொந்தம் என்பதை உயர்ந்த குரலில் (தல்பியா ஊடாக) பிரகடனப் படுத்துகிறார்.
ஹஜ் மற்றும் உம்ரா யாத்திரிகர்கள் இஹ்ராமில் இருந்து விடு படும் வரை பின்வரும் தல்பியாவை அடிக்கடி உரத்தக் குரலில் கூறுவது முக்கிய சுன்னத்தாகும்.
لَبَّيْكَ اللَّهُمَّ لبَّيْكَ، لَبَّيْكَ لا شَرِيْكَ لَكَ لَبَّيْكَ، إنَّ الحَمْدَ،
 والنِّعْمَةَ، لَكَ والمُلْكَ، لا شَرِيْكَ لَكَ
“லப்பைக ல்லாஹும்ம லப்பைக, லப்பைக லாஷரீக லக லப்பைக், இன்னல் ஹம்த வன்னிஃமத லக வல் முல்க், லாஷரீக லக்”
அதன் அர்த்தம் :
“இதோ வந்து விட்டேன்  இறைவா !  இதோ  வந்து விட்டேன்.
உன் அழைப்பை ஏற்று இதோ வந்து விட்டேன், உனக்கு நிகரானோர் எவரும் இல்லை.
இதோ நான் வருகை தந்துள்ளேன். நிச்சயமாக புகழனைத்தும், பாக்கியங்கள் அனைத்தும் உனக்கே சொந்தம்: ஆட்சி, அதிகாரங்கள் உனக்கே உரியன, உனக்கு யாதோர் இணையும் இல்லை.”
பெரும் திரளான மக்கள் ஒன்று திரண்டுள்ள அரபா முற்ற வெளியில் ஏகத் துவ கொள்கையை உள்ளத்தால் ஏற்று, செயலின் மூலம் நிரூபிப்பதோடு, நாவினால் ஹாஜிகள் உறுதி மொழி வழங்குவதும் ஹஜ்ஜின் உயர்வான நோக்கம் ஏகத்துவம் என்பதற்கு பெரும் எடுத்துக் காட்டாகும்.
பின் வரும் ஏகத்துவக் கலிமாவை அதிகதிகம் அரபா முன்றலில் மொழிவது முக்கியமான சுன்னத்தாகும்.
لا إلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لا شَرِيكَ لَهُ، لَهُ المُلْكُ ؛ وَلَهُ الحَمْدُ ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ ،
“லா  இலாஹ இல்ல ல்லா ஹு , வஹ்த ஹு, லா ஷரீக லஹ் , லஹுல் முல்கு வ லஹுல்  ஹம்து, வ ஹுவ அலா குல்லி ஷை இன் கதீர்”
அதன் பொருள் : அல்லாஹ்வைத் தவிர வணங்கி வழி பட தகுதி வாய்ந்த இறைவன் யாரும் இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு யாதொரு இணையும் இல்லை. ஆட்சி அதிகாரங்கள் அவனுக்கே சொந்தம், அனைத்துப் புகழும் அவனுக்கே உரியன. அவன் அனைத்து பொருட்களின் மீதும் ஆற்றல் உடையவன்.
قال النبي صلى الله عليه وسلم : «خير الدعاء دعاء عرفة، وخير ما قلت أنا والنبيون من قبلي: لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد، وهو على كل شيء قدير» رواه الترمذي.
துஆக்களில் சிறந்தது அரபா நாளுடைய துஆ வாகும் என நபி (ஸல் லல்லாஹு அலை ஹி வஸல்லம்) அவர்கள் கூறிவிட்டு, நானும், நபிமார்களும் கூறியதில் சிறந்தது “லா  இலாஹ இல்ல ல்லா ஹு , வஹ்த ஹு, லா ஷரீக லஹ் , லஹுல் முல்கு வ லஹுல்  ஹம்து, வ ஹுவ அலா குல்லி ஷை இன் கதீர்” என்பதாகும் என குறிப்பிட்டார்கள். நூல் : திரிமிதி
ஹஜ் கடமையை நிறை வேற்றுவோர் அதன் பொருளை உணர்ந்து அதன்படி செயல் பட்டு அனைத்து காரியங்களையும் இறைவனுக்காகவே செயல்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த கலிமாவை அந் நாளில் அதிகமதிகம் கூறுவது சுன்னத் தாக்கப் பட்டுள்ளது.
அல்லாஹ்வின் ஆலயமான புனித கஃபாவை மாத்திரம் தவாப் செய்வதும் ஏகத்துவத்தை உணர்த்தும் ஹஜ் கடமையின் முக்கிய செயற்பாடாகும்.
قال الله تعالى :  وَلْيَطَّوَّفُوا بِالْبَيْتِ الْعَتِيقِ [الحج: 29]

பின்னர் (அவர்கள் தலைமுடி இறக்கி, நகம் வெட்டி, குளித்து) தம் அழுக்குகளை நீக்கிக் கொள்ளவும; தம் நேர்ச்சைகளையும் நிறைவேற்றவும்; பூர்வீக ஆலயமான (கஃபா எனும்) வீட்டையிம் அவர்கள் தவாஃப் எசய்ய) சுற்றி வரவும். சூரா 22;29
மண்ணறைகளில் அடக்கம் செய்யப் பட்டுள்ள உடல்களுக்கு மதிப்பளித்து, அல்லது அதற்கு அஞ்சி, அல்லது அதனிடம் ஏதேனும் உதவியை நாடி மண்ணறைகளை சூழ தவாப் செய்தல் அப்பட்டமான ஷிர்க் ஆகும்.
ஹஜ் மற்றும் உம்ராவின் போது, ஹஜருல் அஸ்வத் மற்றும் ருக்னுல் யமானியை தொடும் வேளையில், யாத்திரிகர்கள் அவ்விரண்டு இடங்களுக்கும் எந்தவித நன்மை செய்யவோ, தீமை செய்யவோ சக்தி கிடையாது என்ற நம்பிக்கையுடன் “அல்லாஹு அக்பர்” (அல்லாஹ் மிகப்பெரியவன்) என்று முழங்குவதும் ஏகத் துவத்தை உறுதிப் படுத்தும் செயற் பாடாகும். இறைவனின் கட்டளைக்கு அடிபணிந்தும் இறைத் தூதரின் வழி முறையை பின் பற்றியுமே அவ்வாறு செய்யப் படுகிறது.
இதனால் தான் உமர் (ரழி யல்லாஹு அன்ஹு) அவர்கள் பின் வருமாறு குறிப்பிட்டார்கள் ,
قال أمير المؤمنين عمر بن الخطاب رضي الله عنه حينما استلم الحجر وقبله: والله إني أعلم أنك حجر لا تنفع ولا تضر، ولولا أني رأيت رسول الله صلى الله عليه وسلم يقبلك ما قبلتك. متفق عليه.
அமீருல் முஃமினீன் உமர் பின் அல் கத்தாப் (ரழி யல்லாஹு அன்ஹு) அவர்கள் ஹஜருல் அஸ்வதை தொட்டு முத்தமிட்டார்கள், பிறகு “அல்லாஹ்வின் மீது ஆணையாக, நீ ஒரு கல்லே, நீ எந்த பலனோ, தீமையோ செய்ய சக்தி பெற மாட்டாய் என்று எனக்கு நன்கு தெரியும், இறைத் தூதர் (ஸல் லல்லாஹு அலை ஹி வஸல்லம்) அவர்கள் உனக்கு முத்தமிடுவதை நான் காண வில்லை என்றால் நானும் முத்தமிட்டு இருக்க மாட்டேன்” என்று கூறினார்கள். அதாரம் : புகாரி , முஸ்லிம்.
இதன் மூலம் ஒரு முஸ்லிம் தவாபின் போது ஹஜருல் அஸ்வத் மற்றும் ருக்னுல் யமானியைத் தவிர இறைத் தூதரின் கப்ரு, மகாமு இப்ராஹீம் உள்ளிட்ட இடங்கள், கற்கள் என்பவற்றை தொடுவதோ, முத்தமிடுவதோ மார்க்கத்தில் அனுமதிக்கப் பட்டதல்ல என்பதை விளங்கி கொள்வான்.
தவாபுடைய சுன்னத் தொழுகையின் முதல் ரகஅத்தில் சூரத்துல் காபிரூனும், இரண்டாம் ரகஅத்தில் சூரத்துல் இக்லாசும் ஓதுவது சுன்னத் தாக்கப் பட்டுள்ளமை ஹஜ்ஜின் போது ஏகத்துவத்தை நிலை நிறுத்தும் செயற் பாடாகும்.
சூரத்துல் காபிரூன் ஊடாக ஒரு அடியான் இணை வைப்பாளர்களின் மார்கத்தில் இருந்து தன்னை நீக்கி, இறைவன் ஒருவனுக்கே தனது வணக்கங்களை நிலை நிறுத்துவதை உறுதிப் படுத்துகிறான்.
சூரத்துல் இக்லாஸ் ஊடாக ஒரு அடியான் அனைத்து பரிபூரண பண்புகளையும் இறைவனுக்கு உரித்தாக்கும் அதே வேலை, அனைத்து குறைப்பாடுகளை விட்டும் இறைவனை தூய்மை படுத்துகிறான.
இதன் மூலம் அவன் தனது இறைவனையும், அவனது உயரிய பண்புகளையும் அறிந்து கொள்கிறான். அவனுக்கு மாத்திரம் அவனது வணக்க வழிபாடுகளை நிலை நிறுத்துகிறான். அவனை அன்றி எவனையும் வணங்குவதை தவிர்த்து கொள்கிறான்.
அவ்வாறே மூன்று ஜமராக்களுக்கும் கல் எறிதல், பலிப் பிராணியை அறுத்து பலியிடல், தலை முடியை மழித்தல் , ஐங்காலத் தொழுகைகளை நிறை வேற்றல் உள்ளிட்ட மினாவில் தங்கி இருக்கும் காலங்களில் நிறை வேற்றும் உயர்ந்த வணக்கங்கள் அனைத்தும் ஏகத் துவத்தை பிரதி பலிக்கும் ஹஜ் கிரியைகளாகும்.
ஜம்ராக்களுக்கு கல் எறியும் போது , “அல்லாஹு அக்பர்” (அல்லாஹ் மிகப்பெரியவன்) என்று முழங்குவதன் மூலம் ஏகத்துவக் கொள்கை பிரகடனப் படுத்தப் படுகிறது.
பலிப் பிராணியை அறுப்பதும் ஏக இறைவனை நினைவு கூறும் செயற்பாடாகும். அல் குர்ஆனில் இறைவன் பின் வருமாறு குறிப்பிடுகின்றான்.
قال تعالى:  وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنسَكًا لِّيَذْكُرُ‌وا اسْمَ اللَّـهِ عَلَىٰ مَا رَ‌زَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ ۗ فَإِلَـٰهُكُمْ إِلَـٰهٌ وَاحِدٌ فَلَهُ أَسْلِمُوا ۗ وَبَشِّرِ‌ الْمُخْبِتِينَ ﴿٣٤﴾ [الحج: 34].
இன்னும் கால்நடை(ப்பிராணி)களிலிருந்து அல்லாஹ் அவர்களுக்கு உணவாக்கியுள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற)வற்றின் மீது அவர்கள் அல்லாஹ்வின் பெயரைக் கூறும் படிச் செய்வதற்காக  குர்பானி கொடுப்பதை ஒவ்வொரு சமூகத்தாருக்கும் (கடமையாக) ஆக்கியிருக் கிறோம்; ஆகவே உங்கள் நாயன் ஒரே நாயன்தான்; எனவே அவ(ன் ஒருவ)னுக்கே நீங்கள் முற்றிலும் வழிப்படுங்கள்; (நபியே!) உள்ளச்சம் உடையவர்களுக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக! (அல் குர்ஆன், 22 : 34 )
وقال تعالى: وَالْبُدْنَ جَعَلْنَاهَا لَكُمْ مِنْ شَعَائِرِ اللَّهِ لَكُمْ فِيهَا خَيْرٌ فَاذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَيْهَا صَوَافَّ فَإِذَا وَجَبَتْ جُنُوبُهَا فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْقَانِعَ وَالْمُعْتَرَّ كَذَٰلِكَ سَخَّرْنَاهَا لَكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ * لَنْ يَنَالَ اللَّهَ لُحُومُهَا وَلَا دِمَاؤُهَا وَلَكِنْ يَنَالُهُ التَّقْوَى مِنْكُمْ كَذَٰلِكَ سَخَّرَهَا لَكُمْ لِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَبَشِّرِ الْمُحْسِنِينَ [الحج: 36، 37].
இன்னும் (குர்பானிக்கான) ஒட்டகங்கள்; அவற்றை உங்களுக்காக அல்லாஹ்வின் அடையாளங்களில் உள்ளவையாக நாம் ஆக்கியிருக்கிறோம்; உங்களுக்கு அவற்றில் மிக்க நன்மை உள்ளது; எனவே (அவை உரிய முறையில்) நிற்க வைத்து அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரைச் சொல்(லி குர்பான் செய்)வீர்களாக; பிறகு, அவை தங்கள் விலாப்புறமாக சாய்ந்து கீழே விழுந்(து உயிர் நீத்)த பின் அவற்றிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; (வறுமையிலும் கையேந்தாமல் இருப்பதைக் கொண்டு) திருப்தியாக இருப்போருக்கும், யாசிப்போருக்கும் உண்ணக் கொடுங்கள்;  இவ்விதமாகவே, நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறோம்.
(எனினும்), குர்பானியின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை ஒரு போதும் அடைவதில்லை; ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும்; அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காண்பித்ததற்காக அவனை நீங்கள் பெருமைப் படுத்தும் பொருட்டு - இவ்வாறாக அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; ஆகவே நன்மை செய்வோ ருக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக! (அல் குர்ஆன், 22 : 36, 37)
இதன் மூலம் பிராணிகளை அறுத்து பலியிடுவது ஒரு வணக்கம், அதனை இறைவனுக்காக அன்றி வேறு யாருக்காகவும் நிறைவேற்றக் கூடாது என்பதை ஒரு முஸ்லிம் புரிந்து கொல்கிறான். கல்லறைகள், ஜின்கள், வலிமார்கள் உள்ளிட்ட இறைவனின் படைப்பினங்கள் எவருக்காகவும் பிராணிகளை  பலியிடுவது கூடாது. அவ்வாறு செய்வது மிகப் பெரும் இணை வைப்பாகும். மன்னிக்கப் படாத குற்றம் ஆகும்.
ஹஜ் மற்றும் உம்ரா வணக்கங்களின் போது தலை முடியை மழித்தல் அல்லது கத்தரித்தல் ஆகிய உயரிய வணக்கங்களாகும். தமது தலை முடியை மலிக்கின்றவர்கள் மற்றும் கத்தரிக்கின்றவர்களுக்கு இறைத் தூதர் (ஸல் லல்லாஹு அலை ஹி வஸல்லம்) அவர்கள் துஆ செய்துள்ளார்கள்.
இறைவன் அல் குர்ஆனில் பின் வருமாறு கூறுகிறான் :
 مُحَلِّقِينَ رُءُوسَكُمْ وَمُقَصِّرِينَ [الفتح: 27].
நிச்சயமாக அல்லாஹ் தன் தூதருக்கு (அவர் கண்ட) கனவை உண்மையாக்கி விட்டான்; அல்லாஹ் நாடினால், நிச்சயமாக நீங்கள் மஸ்ஜிதுல் ஹராமில் அச்சம் தீர்ந்தவர்களாகவும், உங்களுடைய தலைகளைச் சிரைத்துக் கொண்டவர்களாகவும்; (உரோமம்) கத்தரித்துக் கொண்டவர்களாகவும் நுழைவீர்கள் (அப்போதும் எவருக்கும்) நீங்கள் பயப்பட மாட்டீர்கள், ஆகவே, நீங்கள் அறியாதிருப்பதை அவன் அறிகிறான் - (அதன் பின்னர்) இதனை அன்றி நெருங்கிய ஒரு வெற்றியையும் (உங்களுக்கு) ஆக்கிக் கொடுத்தான்.” (அல் குர்ஆன் 48:27)
இதன் மூலம் இறைவன் அல்லாத வேறு யாருக்காகவும் தலை முடியை மழித்தல் மாபெரும் ஷிர்க், இறைவன் அதனை மன்னிக்க மாட்டான் என்பதை ஒரு முஸ்லிம் புரிந்து கொல்கிறான்.
ஹஜ் கடமையை நிறை வேற்றும் போதும், நிறை வேற்றிய பிறகும் தன்னை நினைவு கூர்ந்து துதிக்குமாறு இறைவன் கட்டளை இட்டுள்ளான. அவனை அன்றி தலைவர்கள், பெரியவர்கள், உயிரோடிருக்கிறவர்கள், மரித்தவர்கள் எவரையும் நினைவு கூர்வதை தடுத்துள்ளான். அதே போன்று குடும்ப கௌரவங்களை கொண்டு பெருமை அடிப்பதையும் இறைவன் தடுத்துள்ளான்.
இறைவன் அல் குர்ஆனில் பின் வருமாறு கூறுகிறான் :
فقال تعالى: فَإِذَا قَضَيْتُمْ مَنَاسِكَكُمْ فَاذْكُرُوا اللَّهَ كَذِكْرِكُمْ آَبَاءَكُمْ أَوْ أَشَدَّ ذِكْرًا فَمِنَ النَّاسِ مَنْ يَقُولُ رَبَّنَا آَتِنَا فِي الدُّنْيَا وَمَا لَهُ فِي الْآَخِرَةِ مِنْ خَلَاقٍ * وَمِنْهُمْ مَنْ يَقُولُ رَبَّنَا آَتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآَخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ * أُولَئِكَ لَهُمْ نَصِيبٌ مِمَّا كَسَبُوا وَاللَّهُ سَرِيعُ الْحِسَابِ * وَاذْكُرُوا اللَّهَ فِي أَيَّامٍ مَعْدُودَاتٍ فَمَنْ تَعَجَّلَ فِي يَوْمَيْنِ فَلَا إِثْمَ عَلَيْهِ وَمَنْ تَأَخَّرَ فَلَا إِثْمَ عَلَيْهِ لِمَنِ اتَّقَى وَاتَّقُوا اللَّهَ وَاعْلَمُوا أَنَّكُمْ إِلَيْهِ تُحْشَرُونَ [البقرة: 200-203].
ஆகவே, உங்களுடைய ஹஜ்ஜு கிரியைகளை முடித்ததும், நீங்கள் (இதற்கு முன்னர்) உங்கள் தந்தையரை நினைவு கூர்ந்து சிறப்பித்ததைப் போல் - இன்னும் அழுத்தமாக, அதிகமாக அல்லாஹ்வை நினைவு கூர்ந்து திக்ரு செய்யுங்கள்; மனிதர்களில் சிலர், “எங்கள் இறைவனே! இவ்வுலகிலேயே (எல்லா வற்றையும்) எங்களுக்குத் தந்துவிடு” என்று கூறுகிறார்கள்; இத்தகையோ ருக்கு மறுமையில் யாதொரு நற்பாக்கியமும் இல்லை.
இன்னும் அவர்களில் சிலர், “ரப்பனா! (எங்கள் இறைவனே!) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கி யங்களைத் தந்தருள்வாயாக; மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையி லிருந்தும் காத்தருள்வாயாக!” எனக் கேட்போரும் அவர்களில் உண்டு.
இவ்வாறு, (இம்மை - மறுமை இரண்டிலும் நற்பேறுகளைக் கேட்கின்ற) அவர்களுக்குத்தான் அவர்கள் சம்பாதித்த நற்பாக்கியங்கள் உண்டு; தவிர, அல்லாஹ் கணக்கு தீர்ப்பதில் மிகத் தீவிரமானவன்.
குறிப்பிடப் பட்ட நாட்களில் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்; எவரும் (மினாவிலிருந்து) இரண்டு நாட்களில் விரைந்து விட்டால் அவர் மீது குற்றமில்லை; யார் (ஒரு நாள் அதிகமாக) தங்குகிறாறோ அவர் மீதும் குற்றமில்லை; (இது இறைவனை) அஞ்சிக் கொள்வோருக்காக (கூறப்படுகிறது); அல்லாஹ்வை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள்; நீங்கள் நிச்சயமாக அவனிடத்திலே ஒன்று சேர்க்கப் படுவீர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். (அல் குர்ஆன் 2 : 200 முதல் 203) வரை
ஹஜ் மற்றும் உம்ராவின் சட்டங்கள்
ஹஜ் வணக்கத்திற்கு நான்கு முதல் நிலை கடமைகள் (அரகான்) உள்ளன. அவை: இஹ்ராம் , தவாப், சஃயி, அரபாவில் தரித்தல் என்பனவாகும். மேற்படி முதல் நிலை கடமைகளில் ஏதேனும் ஒன்று தவறும் பட்சத்தில் ஹஜ் கடமை செல்லுபடியாகாது.
உம்ராவுக்கு மூன்று முதல் நிலை கடமைகள் (அர்கான்) உள்ளன. அவை: இஹ்ராம் , தவாப், சஃயி என்பனவாகும்.
 முதல் நிலைக் கடமைகளில் முதலாவது : அல் இஹ்ராம் :
இஹ்ராம் என்பது ஆடைகளை களைவதுடன்,  அல்லது தல்பியா கூறுவதுடன் ஹஜ் மற்றும் உம்ரா கடமைகளில் நுழைவதற்கான எண்ணம் வைப்பதையே குறிக்கிறது. ஏனெனில் ஒருவன் உள்ளத்தால் எண்ணம் கொள்வதன் மூலம் மாத்திரம் “முஹ்ரிம்” ஆக மாட்டான். மாற்றமாக அவன் உள்ளத்தில் கொண்டுள்ள எண்ணத்தை உறுதிப் படுத்தும் வார்த்தையை மொழிய வேண்டும், அல்லது அதனை உறுதிப் படுத்தும் செயலை செய்ய வேண்டும் என்பதே அறிஞர்களிடம் நிலவும் இரு வெவ்வேறு கருத்துக்களில் சரியான கருத்தாகும்.
இஹ்ராமின் வாஜிப்கள், சுன்னத்துக்கள் மற்றும் இஹ்ராமின் பின்  தடை செய்யப் பட்டவைகள்
இஹ்ராமின் வாஜிப்கள்
நிர்ணயிக்கப் பட்ட எல்லைகளை (மீக்காத்) கடப்பதற்கு முன்னர் நிய்யத் வைத்தல் இஹ்ராமின் வாஜிப்களில் ஒன்று ஆகும் :
عن ابن عباس رضي الله عنهما قال: «وقت رسول الله صلى الله عليه وسلم لأهل المدينة ذا الحليفة، ولأهل الشام الجحفة، ولأهل نجد قرن المنازل، ولأهل اليمن يلملم، هن لهن ولمن أتى عليهن من غيرهن ممن أراد الحج والعمرة، ومن كان دون ذلك فمن حيث أنشأ، حتى أهل مكة من مكة» متفق عليه.
மதீனா பிரதேசத்தில் இருந்து வருவோருக்கு “துல் ஹுளைபா” எனும் இடத்தையும், ஷாம் பிரதேசத்தில் இருந்து வருவோருக்கு “அல் ஜூஹ்பா” எனும் இடத்தையும், நஜ்த் பிரதேசத்தில் இருந்து வருவோருக்கு “கர்னுல் மனாஸில்” எனும் இடத்தையும், யமன் பிரதேசத்தில் இருந்து வருவோருக்கு “யலம்லம்” எனும் இடத்தையும் ஹஜ் மற்றும் உம்ராவுக்கு வருவோருக்கான எல்லைகளாக (மீகாத்களாக) நிர்ணயித்த இறைத் தூதர் (ஸல் லல்லாஹு அலை ஹி வஸல்லம்) அவர்கள், இந்த எல்லைகள் குறித்த பிரதேசத்தில் இருந்து  வருகின்றவர்களுக்கும், வேறு பிரதேசங்களில் இருந்து அதனை கடந்து செல்கின்றவர்களுக்குமான எல்லைகளாகும் என குறிப்பிட்டார்கள். இந்த எல்லைகளுக்கு உட்பட்ட பகுதியில் இருந்து ஹஜ் மற்றும் உம்ராவுக்கு செல்வோர் அவர்கள் பயணத்தை ஆரம்பிக்கும் இடத்தில் இருந்தே நிய்யத் செய்து கொள்ள வேண்டும். எனவே, மக்காவில் இருந்து வருவோர் மக்காவில் இருந்தே நிய்யத் செய்து கொள்ள வேண்டும் என இறைத் தூதர் (ஸல் லல்லாஹு அலை ஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஹுரைராஹ் (ரழி) அதாரம் : புகாரி, முஸ்லிம்.
عن عائشة رضي الله عنها «أن النبي صلى الله عليه وسلم وقت لأهل العراق ذات عرق» رواه أبو داود والنسائي.
ஈராக் பிரதேசத்தில் இருந்து உம்ரா மற்றும் ஹஜ்ஜுக்காக வருவோருக்கு “தாது இர்க்” எனும் இடத்தை இறைத் தூதர் (ஸல் லல்லாஹு அலை ஹி வஸல்லம்) அவர்கள் எல்லையாக நிர்ணயித்ததாக ஆஇஷா (ரழி யல்லா ஹு அன்ஹா) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நூல் ; அபூ தாவூத், நாஸாஈ
மீக்காத்  என்றால் குறித்த பிரதேசங்களை கடக்க முன் புனித மிக்க அல்லாஹ்வின் ஆலயத்திற்கு மதிப்பும், மரியாதையும் வழங்கி இஹ்ராம் செய்து கொள்வதற்காக இறைத் தூதர் (ஸல் லல்லாஹு அலை ஹி வஸல்லம்) அவர்கள் எல்லையாக நிர்ணயித்த பகுதிகளாகும்.
தனது தூதர் (ஸல் லல்லாஹு அலை ஹி வஸல்லம்) அவர்களுக்கு மக்காவை கோட்டையாக அமைத்துக் கொடுத்த இறைவன், அதனை சூழ பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் புனித பூமிகளை அமைத்ததோடு, மீக்காத் என்னும் எல்லைகளையும் அமைத்தான். ஹஜ் மற்றும் உம்ராவுக்காக வருவோர் புனித மிக்க அல்லாஹ் வின் ஆலயத்திற்கு மதிப்பும், மரியாதையும் வழங்கி இஹ்ராம் இன்றி அந்த எல்லைகளை கடக்கக் கூடாது. அந்த இஹ்ராம் இன்றி ஒருவர் கடந்து சென்று விட்டால், அவர் மீண்டும் அந்த எல்லைக்கு வந்து இஹ்ராம் செய்ய வேண்டும், அல்லது அவர் ஒரு பலி பிராணியை அறுத்து பலியிட வேண்டும்.  அதற்கு அவர் சக்தி பெறாத சந்தர்பத்தில் பத்து நாட்கள் நோன்பு பிடிக்க வேண்டும். அதே வேலை மீகாத்தை அடைய முன் இஹ்ராம் செய்வது மக்ரூஹ் ஆகும். ஏனெனில் இறைத் தூதர் (ஸல் லல்லாஹு அலை ஹி வஸல்லம்) அவர்கள் தமது இறுதி ஹஜ் பயணத்தின் போது மதீனாவில் இருந்து “துல் ஹுலைபா” வை அடையும் வரை இஹ்ராம் செய்ய வில்லை.
ஹஜ்ஜுக்காக அல்லது உம்ராவுக்காக நிய்யத் (இஹ்ராம்) செய்தவுடன் ஆடைகளை கலைவதும் வாஜிப் ஆகும்:
عن ابن عمر رضي الله عنهما أن رجلًا سأل رسول الله صلى الله عليه وسلم ما يلبس المحرم من الثياب، فقال رسول الله صلى الله عليه وسلم : «لا تلبسوا القمص ولا العمائم، ولا السراويلات، ولا البرانس، ولا الخفاف، إلا أحد لا يجد النعلين فيلبس الخفين وليقطعهما أسفل من الكعبين، ولا تلبسوا من الثياب شيئًا مسه الزعفران ولا الورس».
இறைத் தூதர் (ஸல் லல்லாஹு அலை ஹி வஸல்லம்) அவர்களிடம் ஒருவர் வந்து இஹ்ராம் செய்தவர் எந்த விதமான ஆடைகளை அணிய வேண்டும் என வினவினார்கள். அதற்கு அவர்கள், சட்டை (ஷர்ட்), தலைப்பாகை. காற் சட்டைகள், நீண்ட குல்லாய், (அரேபியர்கள் அணியும்) “குப்” (எனப் படும் நீண்ட சப்பாத்து) ஆகியவற்றை இஹ்ராம் செய்தோர் அணிய கூடாது, அணிவதற்கு சாதாரண காலணிகள் இல்லாத சந்தர்பத்தில் கணுக் காலுக்கு கீழ் பகுதியில் வெட்டி விட்டு “குப்” பை அணியலாம்,  மணங்கள் பட்ட ஆடைகளையும் அவர் அணிய கூடாது என பதிலளித்ததாக இப்னு உமர் (ரழி யல்லா ஹு அன்ஹுமா) அவர்கள் அறிவித்தார்கள்.
ஷேர்ட், காற் சட்டைகள் உடம்பை சூழ தைக்கப் பட்ட ஆடைகளை இஹ்ராம் செய்தோர் அணிய கூடாது. ஆடம்பரத்தை விட்டும் தூரமானவர் களாக, பய பக்தியையும், பணிவையும் பிரதி பலிக்கும் அதே வேலை அவன் இஹ்ராமுடன் இருக்கும் எல்லா சந்தர்ப்பத்திலும் மரணத்தையும், கபன் ஆடைகளையும் நினைவு கூர்வதோடு, மறுமையில் ஆடைகள் இன்றி, பாதணிகள் இன்றி இறைவன் முன்னிலையில் மக்கள் கொண்டு வரப் படும் சூழலை நினைவு ஊட்டும் விதமான இரண்டு வெள்ளை துணிகளையே இஹ்ராம் செய்தோர் அணிகின்றனர். புனித மிக்க அல்லாஹ்வின் ஆலயத்திற்குரிய மதிப்பையும், மரியாதையும் வழங்கி, அதனை சங்கைப் படுத்தியவனாக, அனைத்தையும் துறந்து இறைவனை நோக்கி வந்துள்ளதை உறுதிப் படுத்தும் ஆடைகளே இஹ்ராமின் ஆடைகள்.
“தமத்துஃ” முறையில் ஹஜ் செய்வோர், ("لبيك عمرة متمتعًا بها إلى الحج") “லப்பைக உம்ரதன் முதமத்தி அன் பிஹா இலல் ஹஜ்” என்று நிய்யத் செய்ய வேண்டும். (அதன் அர்த்தம் : இறைவா! இதோ நான் வந்து விட்டேன், உம்ராவை செய்து முடித்து  விட்டு ஹஜ் வரை இஹ்ராம் இன்றி இருக்க நிய்யத் செய்கிறேன்).
ஹஜ் கடமையை செய்யும் போது ஏதாவது தடங்கல் ஏற்பட்டு அதனை செய்து முடிக்க முடியாத சூழல் ஏற்படும் என்று அஞ்சினால்,    ("وإن حبسني حابس فمحلي حيث حبستني") “வ இன் ஹபஸனி ஹாபிஸுன் ஃப ம ஹில்லீ ஹைது ஹபஸ்த னீ” என இஹ்ராம் நிய்யத்தின் போது, நிபந்தனை செய்துக் கொள்வது முஸ்தஹப் ஆகும். ஹஜ் கடமையை நிறைவேற்ற தடைகள் ஏற்படலாம் என்று ஏதேனும் அச்சம் நிலவாத சந்தர்பத்தில் மேற்குறிப்பிடப் பட்டவாறு நிபந்தனை இடுவது அவசியமில்லை. அவ்வாறு நிபந்தனை செய்து கொண்டால் குற்றமுமில்லை. அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
பலிப் பிராணியை தன்னுடன் கொண்டு செல்கின்றவர் ஹஜ்ஜையும் உம்ராவையும் சேர்த்து “கிரான்” முறையில் நிறைவேற்றுவது அவசியமாகும். “கிரான்” முறையில் ஹஜ் செய்வோர் பின் வருமாறு நிய்யத் செய்ய வேண்டும்.
"لبيك عمرة وحجًا لَبَّيْكَ اللَّهُمَّ لبَّيْكَ، لَبَّيْكَ لا شَرِيْكَ لَكَ لَبَّيْكَ، إنَّ الحَمْدَ، والنِّعْمَةَ، لَكَ والمُلْكَ، لا شَرِيْكَ لَكَ"
“லப்பைக உம்ரதன், வ ஹஜ்ஜன், லப்பைக ல்லாஹும்ம லப்பைக, லப்பைக லாஷரீக லக லப்பைக், இன்னல் ஹம்த வன்னிஃமத லக வல் முல்க், லாஷரீக லக்”
அதன் அர்த்தம் :
இதோ வந்து விட்டேன், உம்ராவையும் ஹஜ்ஜையும் நிறை வேற்ற வந்து விட்டேன்.
இதோ வந்து விட்டேன்  இறைவா! இதோ வந்து விட்டேன்.
உன் அழைப்பை ஏற்று இதோ வந்து விட்டேன், உனக்கு நிகரானோர் எவரும் இல்லை.
இதோ நான் வருகை தந்துள்ளேன். நிச்சயமாக புகழனைத்தும், பாக்கியங்கள் அனைத்தும் உனக்கே சொந்தம்: ஆட்சி, அதிகாரங்கள் உனக்கே உரியன, உனக்கு யாதோர் இணையும் இல்லை.
இறைத் தூதர் இப்ராஹீம் (அலைஹிஸ் ஸலாம்) ஊடாக இறைவன் மக்களுக்கு விடுத்துள்ள அழைப்பை ஏற்று அவனுக்கு வழிப்பட்டு ஹஜ் வணக்கத்தை நிறைவேற்ற வந்து விட்டேன் என்பதை உறுதிப் படுத்தும் வார்த்தைகளே “தல்பியா” ஆகும். இறைவா! உனது கட்டளையை ஏற்று உனக்கு வழிப்படுகிறேன், தொடர்ந்தும் வழிப்பட்டுக் கொண்டே இருப்பேன் என்பதையே தல்பியா கூறுகிறவர் உறுதி அளிக்கிறார்.
இறைவன் தனது அடியார்களுக்கு வழங்கியுள்ள மதிப்பை “தல்பியா” உணர்த்துகிறது. ஏனெனில் அவனின் அழைப்பை ஏற்று அவனது இல்லத்திற்கு வந்துள்ள விருந்தாளிகளே ஹஜ் யாத்திரிகர்கள் ஆவர்.
ஹஜ்ஜுக்காவோ, உம்ராவுக்காகவோ நிய்யத் (இஹ்ராம்) செய்யும் போது, ("اللهم إني أريد العمرة أو الحج") “அல்லாஹும்ம இன்னீ உரீதுல் உம்ரத” அல்லது “அல்லாஹும்ம இன்னீ உரீதுல் ஹஜ்ஜ” என கூறுவது முஸ்தஹப் ஆகாது. ஏனெனில் இறைத் தூதர் (ஸல் லல்லாஹு அலை ஹி வஸல்லம்) அவர்களோ, அவர்களின் தோழர்களில் எவருமோ இவ்வாறு கூறவும் இல்லை, அவ்வாறு கூறுவதை கற்றுக் கொடுக்கவும் இல்லை.
("لبيك عمرة وحجًا) “லப்பைக உம்ரதன், வ ஹஜ்ஜன்” என்றே அவர்கள் நிய்யத் செய்யும் போது கூறி உள்ளார்கள். மேலும் தமது தோழர்களுக்கும் கற்றுக் கொடுத்துள்ளார்கள்.

 

 

 

 

இஹ்ராமின் சுன்னத்துக்கள் :
இஹ்ராமுக்காக குளித்தல், மாதவிடாய் மற்றும் பிரசவ உதிரப் போக்குள்ள பெண்களும் குளிப்பது சுன்னத் ஆகும்.
أن أسماء بنت عميس امرأة أبي بكر رضي الله عنه وضعت وهي تريد الحج فأمرها رسول الله صلى الله عليه وسلم « بالاغتسال» ، رواه مسلم.
அபூபக்ர் (ரழி யல்லா ஹு அன்ஹு) அவர்களின் மனைவியான அஸ்மா பின்த் உமைஸ் (ரழி யல்லா ஹு அன்ஹா) அவர்கள் ஹஜ்ஜுக்கு செல்ல நாடி இருந்த போது, அவருக்கு பிரசவம் ஏற்பட்டது. (அந்நிலையிலும்) அவரை குளிக்குமாறு இறைத் தூதர் (ஸல் லல்லாஹு அலை ஹி வஸல்லம்) அவர்கள் பணித்தார்கள். ஆதாரம் : முஸ்லிம்.
وأمر عائشة رضي الله عنها «أن تغتسل لإهلال الحج وهي حائض» متفق عليه.
ஹஜ்ஜுக்கு செல்லும் போது ஆஇஷா (ரலி யல்லா ஹு அன்ஹா) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்தது. அப்போதும் அவரை குளிக்குமாறு இறைத் தூதர் (ஸல் லல்லாஹு அலை ஹி வஸல்லம்) அவர்கள் பணித்தார்கள். ஆதாரம் : புகாரி , முஸ்லிம்.
وعن زيد بن ثابت رضي الله عنه «أنه رأى النبي صلى الله عليه وسلم تجرد لإهلاله واغتسل» رواه الترمذي والدارمي.
இறைத் தூதர் (ஸல் லல்லாஹு அலை ஹி வஸல்லம்) அவர்கள் இஹ்ராமுக்காக (தைத்த) ஆடைகளை களைந்து விட்டு, அவர்கள் குளித்ததை தாம் பார்த்ததாக செய்த் பின் ஸாபித் (ரலி யல்லா ஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள். ஆதாரம் : திர்மிதி , தாரமி.
இஹ்ராமுக்கு முன் உடம்பில் நறுமணம் பூசுவதும் சுன்னத் ஆகும்.
عن عائشة: كنت أطيب رسول الله صلى الله عليه وسلم لإحرامه قبل أن يرحم ولحله قبل أن يطوف بالبيت. متفق عليه.
இறைத் தூதர் (ஸல் லல்லாஹு அலை ஹி வஸல்லம்) அவர்கள் இஹ்ராம் செய்யும் முன் இஹ்ராமுக்காகவும், இஹ்ராமில் இருந்து விடு படும் வேளையில் தவாப் செய்யு முன்னரும் தாம் அவர்களக்கு நறு மனம் பூசி விடுவதாக ஆஇஷா (ரழி யல்லா ஹு அன்ஹா) அவர்கள் தெரிவிக்கின்றார்கள். ஆதாரம் : புகாரி , முஸ்லிம்.
பெண்கள் மருதாணி வைத்துக் கொள்வதும் சுன்னத் ஆகும். பெண்கள் தமது கைகளுக்கு மருதாணி வைத்துக் கொல்வது சுன்னாவாகும் என்று இப்னு உமர் (ரழி யல்லா ஹு அன்ஹு) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆதாரம் : ஷாபிஈ , பைஹகி.
அடிக்கடி தல்பியா கூறுவதும் சுன்னத் ஆகும்.
ஏறுதல், இறங்குதல் போன்ற வெவ்வேறு நிலைமை மாற்றங்களின் போதும் தல்பியா கூறுவது சுன்னத் ஆகும்.
عن جابر: كان النبي صلى الله عليه وسلم يلبي في حجته إذا لقي ركبًان أو علا أكمةً، أو هبط واديًا، وفي أدبار الصلاة المكتوبة، وفي آخر الليل. رواه ابن عساكر، قاله في التلخيص.
இறைத் தூதர் (ஸல் லல்லாஹு அலை ஹி வஸல்லம்) அவர்கள் யாத்திரிகர்களை சந்திக்கும் போதும், குன்றுகள் மீது ஏறும் போதும், பள்ளத் தாக்குகளில் இறங்கும் போதும், கடமையான தொழுகைகளின் பின்பும், இரவு வேலைகளிலும் தல்பியா கூரியதாக ஜாபிர் (ரலி யல்லா ஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம் : இப்னு அசாகிர்
 عن سهل بن سعد، عن رسول الله صلى الله عليه وسلم: «ما من مسلم يلبي إلا لبى من على يمينه، أو شماله، من حجر، أو شجر، أو مدر، حتى تنقطع الأرض، من ههنا وههنا» رواه الترمذي وهو حديث صحيح بشواهده.
ஒரு முஸ்லிம் தல்பியா கூருவதை செவியுறும் பூமி எங்குமுள்ள கற்கள், மரங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தல்பியா கூறுகின்றன என இறைத் தூதர் (ஸல் லல்லாஹு அலை ஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக ஸஹ்ல் பின் ஸஃத் (ரழி யால்லா ஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின் றார்கள். ஆதாரம்: திர்மிதி.
இஹ்ராமுக்கு முன் அல்லாஹ்வை புகழ்வதும், தஸ்பீஹ் மற்றும் தக்பீர் கூறுவதும் சுன்னத் ஆகும்.
இமாம் புகாரி அவர்கள் இஹ்ராம் கட்டுவதற்கு முன்னால் வாகனத்தின் மீதமர்ந்த நிலையில் அல்ஹம்து லில்லாஹ், சுப்ஹானல்லாஹ், அல்லாஹு அக்பர் என கூறுதல் என்ற தலைப்பை தமது கிரந்தத்தில் குறிப்பிட்டு  பின்வரும் அனஸ் (ரழி யால்லா ஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸை எழுதி உள்ளார்கள்.
நாங்கள் நபி (ஸல் லல்லாஹு அலை ஹி வஸல்லம்) அவர்களோடு இருந்தோம். அவர்கள் மதீனாவில் நான்கு ரக்அத்கள் லுஹர் தொழுதார்கள். துல் ஹுலைஃபாவில் இரண்டு ரக்அத்கள் அஸர் தொழுதார்கள். பிறகு விடியும் வரை அங்கேயே தங்கிவிட்டு மீண்டும் வாகனத்தின் மீதமர்ந்து பைதா எனுமிடத்தில் வாகனம் நிலைக்கு வந்தபோது ‘அல்ஹம்து லில்லாஹ், ஸுப்ஹானல்லாஹ், அல்லாஹு அக்பர்’ எனக் கூறினார்கள். பிறகு ஹஜ், உம்ரா இரண்டிற்காகவும் இஹ்ராம் அணிந்து, தல்பியா கூறினார்கள் என அனஸ் (ரழி யால்லா ஹு அன்ஹு) அவர்கள் அறிவிகின்றார்கள்.
தல்பியா கூறி முடிந்த பிறகு துஆ கேட்பதும், நபி (ஸல் லல்லாஹு அலை ஹி வஸல்லம்) அவர்கள் மீது சலவாத்து சொல்வதும் முஸ்தஹப் ஆகும்.
இறைத் தூதர் (ஸல் லல்லாஹு அலை ஹி வஸல்லம்) அவர்கள் தல்பியா கூறி முடிந்த பிறகு அல்லாஹ் விடத்தில் அவனது திரு பொருத்தத்தையும், உயரிய சுவனத்தையும்  வேண்டுவதோடு, அவனது அருளின் மூலம் நரகத்தை விட்டும் பாதுகாப்பு வேண்டுவார்கள் என இமாம் ஷாபிஈ மற்றும் தாரகுத்னி ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சுன்னத்துக்களை செய்யாமல் விடுவதால் அவற்றை ஈடு செய்ய எந்தவொரு பரிகாரமும் கடமை ஆகாது. எனினும் அவற்றை தவற விடு தால் நிறைய நன்மைகளையும், பாரிய வெகுமதிகளையும் இழக்க நேரிடும்.
இஹ்ராம் செய்ததும் தடுக்கப் பட்டவை :
இஹ்ராம் செய்த பிறகு தடை செய்யப் பட்டுள்ள ஒன்பது காரியங்கள் உள்ளன, அவை :
1.    உடம்பில் இருந்து மயிர்களை நீக்குவது.
2.    நகங்களை வெட்டுவது.
3.    ஆண்கள் முகத்தையும், தலையையும் வேண்டு மென்றே மூடுவது. பெண்களும் முகத்தை மூடக் கூடாது. எனினும் அவள் முன்னிலையில் அந்நிய ஆண்கள் இருந்தால் அவளின் முகத்தை மறைத்துக் கொள்வது கட்டாயமாகும்.
4.    (சட்டை, கால் சட்டைப் போன்ற) தைக்கப் பட்ட ஆடைகளை வேண்டுமென்றே அணிதல்.
5.    வேண்டுமென்றே வாசனைத் திரவியங்களை முகர்வது அல்லது அதனை பூசிக் கொல்வது.
6.    காட்டில் வாழும் புசிக்கத்தக்க வேட்டை பிராணிகளை கொலை செய்தல்.
7.    திருமண ஒப்பந்தங்கள் செய்தல். அப்படி செய்தால் அது நிறை வேறாது. திருமணம் பேசுவதும் தடை செய்யப் பட்டுள்ளது.
8.    உடலுறவு செய்தல்.
9.    முத்தமிடல் உள்ளிட்ட இச்சையூட்டும் செயல் களை செய்தல்.
மேல் குறிப்பிடப் பட்டவாறு வரிசைப் படி ஒன்றில் இருந்து ஐந்து வரையிலான இஹ்ரம் செய்த பிறகு தடை செய்யப்பட்ட காரியங்களில் ஒன்றை ஒருவர் செய்து விட்டால், அதற்காக மூன்று நாட்கள் நோன்பு நோற்றல் அல்லது ஆறு ஏழைகளுக்கு உணவளித்தல் அல்லது ஒரு ஆட்டை அறுத்து பலியிடல் உள்ளிட்ட ஏதேனும் ஒரு குற்றப் பரிகாரத்தை நிறை வேற்றியாக வேண்டும்.
இறைவன் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளான்.
ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள்; (அப்படிப் பூர்த்தி செய்ய முடியாதவாறு) நீங்கள் தடுக்கப்படுவீர்களாயின் உங்களுக்கு சாத்தியமான ஹத்யு (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற தியாகப் பொருளை) அனுப்பி விடுங்கள; அந்த ஹத்யு (குர்பான் செய்யப்படும்) இடத்தை அடைவதற்கு முன் உங்கள் தலை முடிகளைக் களையாதீர்கள்; ஆயினும், உங்களில் எவரேனும் நோயாளியாக இருப்பதினாலோ அல்லது தலையில் ஏதேனும் தொந்தரவு தரக்கூடிய பிணியின் காரணமாகவோ (தலை முடியை இறக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால்) அதற்குப் பரிகாரமாக நோன்பு இருத்தல் வேண்டும், அல்லது தர்மம் கொடுத்தல் வேண்டும், அல்லது குர்பானி கொடுத்தல் வேண்டும்... (அல் குர்ஆன் , 2 : 196)
வேட்டைப் பிராணிகளில் ஒன்றை கொலை செய்து விட்டால், அதற்காக அவற்றுக்கு சமனான ஒன்றை பரிகாரமாக கொடுக்க வேண்டும். இறைவன் பின் வருமாறு குறிப்பிடுகிறான்.
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் இஹ்ராம் உடை உடுத்தியவர்களாக இருக்கும் நிலையில் வேட்டை (யாடி)  பிராணிகளைக் கொல்லாதீர்கள்; உங்களில் யாராவது ஒருவர் வேண்டு மென்றே அதைக் கொன்றால், (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால் நடைகளிலிருந்து அவர் கொன்றதற்கு சமமான ஒன்றை (பரிகாரமாக) ஈடாகக் கொடுக்க வேண்டியது. அதற்கு உங்களில் நீதமுடைய இருவர் தீர்ப்பளிக்க வேண்டும்; அது கஃபாவை அடைய வேண்டிய குர்பானியாகும்; அல்லது பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும், அல்லது (பரிகாரமளிக்க ஏதும் இல்லையாயின்) தனது வினையின் பலனை அனுபவிப்பதற்காக அதற்குச் சமமான நோன்புகள் நோற்பது (அதற்கு ஈடாகும் முன்னால் நடந்ததை அல்லாஹ் மன்னித்து விட்டான், எவர் மீண்டும் (இதைச்) செய்வாரோ அல்லாஹ் அவரை வேதனை செய்வான், அல்லாஹ் (யாவரையும்) மிகைத்த வனாகவும், (குற்றம் செய்வோருக்குத்) தண்டனை கொடுக்க உரியோனாகவும் இருக்கிறான். (அல் குர்ஆன்  5 : 95)
 திருமண ஒப்பந்தம் செய்தல், திருமணம் பேசுதல் மற்றும் புறம் பேசுதல், பிறருக்கு மத்தியில் சச்சரவுகளை மூட்டி விடுவதற்காக குறைகளை சொல்லித் திரிவது உள்ளிட்ட பாவமான காரியங்களை செய்தவர் அதற்காக இறைவனிடம் இஸ்திக்பாரும், தௌபாவும் செய்ய வேண்டும். அதற்காக பரிகாரமாக எதனையும் அளிக்க வேண்டியதில்லை.
இஹ்ராமில் இருந்து நீங்கி விடுவதில் உள்ள இரு நிலைகளில் முதல் நிலைக்கு முன்பே தனது மனைவியுடன் உடல் உறவில் ஈடு பட்டு விட்டால், ஹஜ்ஜின் கடமை முழுமையாக வீணாகி விடும். எஞ்சியிருக்கும் ஹஜ்ஜின் கடமைகளை தொடர்ந்தும் நிறை வேற்றுவதோடு அதனை அடுத்த வருடம் மீண்டும் கழா செய்திட வேண்டும்.
இவ்வாறு உடலுறவு மூலம் தனது ஹஜ்ஜை வீனாக்கியவர் ஒரு ஒட்டகத்தை அறுத்து ஹரத்தில் உள்ள ஏழைகளுக்கு பகிர்ந்தளித்திட வேண்டும். ஒட்டகம் கிடைக்காவிட்டால் ஹஜ்ஜின் போது மூன்று நாட்களும், வீடு திரும்பியதும் ஏழு நாட்களுமாக பத்து நாட்கள் நோன்பு நோற்றிட வேண்டும். இந்த நிலைப்பாட்டை உமர், அலி, அபூ ஹுரைரா (ரழி யல்லா ஹு அன்ஹும்) ஆகியோர் கொண்டிருந்ததை மாலிக் உட்பட சில அறிஞர்கள் அறிவித்துள்ள செய்திகள் உறுதி படுத்து கின்றன. மேலும், இந்த நிலைப்பாட்டை இப்னு அப்பாஸ், இப்னு உமர் (ரழி யல்லா ஹு அன்ஹுமா) ஆகியோர் கொண்டிருந்ததை அஹ்மத், ஹாகிம், தாரகுத்னி உள்ளிட்ட சில அறிஞர்கள் அறிவித்துள்ள செய்திகள் உறுதி படுத்துகின்றன.
இஹ்ராமில் இருந்து நீங்கி விடுவதில் உள்ள இரு நிலைகளில் முதல் நிலைக்கு பின்பு தனது மனைவியுடன் உடல் உறவில் ஈடு பட்டால் ஹஜ்ஜின் கடமை முழுமையாக வீணாகி விடாது. அதற்கு பரிகாரமாக ஒரு ஆட்டை அறுத்து பலியிட வேண்டும்.
மறை விடத்தை தவிர்த்து இச்சை ஊட்டும் செயல்களில் ஈடுபட்டால் ஹஜ் கடமை வீணாகி விடாது. எனினும் அதனால் விந்து வெளிப் பட்டுவிட்டால் அதற்கு பரிகாரமாக ஒரு ஆட்டை அறுத்து பலியிட்டு ஹரம் எல்லையில் வசிக்கும் ஏழைகளுக்கு பகிர்ந்தளித்திட வேண்டும்.
முதல் நிலைக் கடமைகளில் இரண்டாவது : அரபாவில் தரித்தல்
துல் ஹஜ் மாதத்தின் ஒன்பதாம் நாள் அரபாவுக்கு சென்று அங்கு தரித்தல் ஹஜ்ஜின் முக்கிய கடமை யாகும். அதன் நேரம் சூரியன் உச்சியில் இருந்து சாய்ந்த (ழுஹர்) உடன் ஆரம்பமாகி, அடுத்த நாள் “யவ்முன் நஹ்ர்” பஜ்ர் வரை  நீடிக்கும். சூரியன் உச்சியில் இருந்து சாய்வதற்கு முன் அரபாவில் தரிப்படுவதை பிரசித்திப் பெற்ற மூன்று அறிஞர்களையும் அடியொட்டி அதிகமான மார்க்க அறிஞர்கள் அதற்குரிய நேரமாக கருதவில்லை. ஏனெனில் இறைத் தூதர் (ஸல் லல்லா ஹு அலை ஹி வஸல்லம்) அவர்களும், அவர்களின் தோழர்களும் சூரியன் உச்சியில் இருந்து சாய்ந்த பிறகே அரபாவில் தரித்துள்ளார்கள். எனவே இவ்வாறு அதற்கு முன்னர் அரபாவில் தரிப்படுவது ஏற்றுக் கொள்ளப் பட மாட்டாது என மேற்படி அறிஞர்கள் கருதுகின்றனர்.
உர்வா பின் முதர்ரிஸ் அத் தாஈ (ரழி யல்லா ஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸை அடிப்படையாக கொண்டே சூரியன் உச்சியில் இருந்து சாய்வதற்கு முன் அரபாவில் தரிப்படுவதை சில அறிஞர்கள் அனுமதிக் கின்றனர்.
حديث عروة بن مضرس، الذي رواه الخمسة وصححه الترمذي، عن النبي صلى الله عليه وسلم وفيه: «من شهد صلاتنا هذه فوقف معنا حتى ندفع، وقد وقف بعرفة قبل ذلك ليلًا أو نهارًا، فقد تم حجه وقضى تفثه».
யார் எம்முடன் சேர்ந்து இந்த தொழுகையை (முஸ்தலிபாவில் பஜ்ர் தொழுகை) தொழுது விட்டு நாம் மினாவுக்கு செல்லும் வரை எம்முடன் இங்கு (முஸ்தலிபாவில்) இருந்தார்களோ, அதற்கு முன்னர் இரவிலோ பகலிலோ அரபாவில் தரிப்பட்டிருந் தால் அவரது ஹஜ் ஏற்றுக் கொள்ளப் படும். அவர் ஹஜ்ஜின் பிரதான கடமைகளை நிறை வேற்றியவராக கருதப்படுவார் என இறைத் தூதர் (ஸல் லல்லா ஹு அலை ஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக உர்வா பின் முதர்ரிஸ் அத் தாஈ (ரழி யல்லா ஹு அன்ஹு) அவர்கள் அறிவித்தார்கள். (ஆதாரம்: அஹ்மத், அபூ தாவூத், நசாஈ, இப்னு மாஜாஹ், திர்மிதி)
இந்த ஹதீஸை ஆதாரமாக வைத்து இமாம் அஹ்மத் அவர்கள் அரபாவுடைய தினம் (துல் ஹஜ் மாதம்  ஒன்பதாம் நாள்) முழுவதும் , அடுத்த நாள் பஜ்ர் வரை அரபாவில் தங்குவதற்கான நேரமாகும் என குறிப்பிட்டுள்ளார்கள். அல்லாஹ்வே நன்கறிந்தவன்.
அரபா நாளின் பல்வேறு சிறப்புக்கள் :
அது அல்லாஹ்வின் மார்க்கம் மற்றும் அவனது அருட் கொடைகள் பூர்த்தி செய்யப் பட்ட நாளாகும். இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட் கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன். (அல் குர்ஆன் 3-5 ) என்று இறைவன் அரபா தினமன்று கூறியுள்ளான்.
அன்றைய தினமும், அதனை அடுத்து வரும் யவ்முன் நஹ்ர் மற்றும் அதனைத் தொடர்ந்துள்ள அய்யாமுத் தஷ்ரீக் உடைய நாட்களும் முஸ்லிம் மக்களின் பெரு நாள் தினமாகும். இதனையே பின் வரும் ஹதீஸ் தெளிவு படுத்துகிறது. “அரபா வுடைய தினமும், யவ்முன் நஹ்ர் தினமும், அய்யாமுத் தஷ்ரீக் உடைய நாட்களும் முஸ்லிம் களாகிய எமது பெரு நாள் தினங்களாகும் என இறைத் தூதர் (ஸல் லல்லா ஹு அலை ஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக உக்பா (ரழி யல்லா ஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார் கள்.  (ஆதாரம் : அஹ்மத், அபூ தாவூத், நசாஈ, திர்மிதி)
இது பெரும் திரளான உலக மக்கள் சேர்ந்து ஒரே மைதானத்தில் நிற்கும் தினம்; அங்கு தமது பாவங்களை வருந்தி கண்ணீர் சிந்தப் படுகின்றன, பாவங்களெல்லாம் கழுவப் படுகின்றன. இது போன்ற பாரிய கூட்டத்தை ஒன்றிணைக்கும் இடம் உலகில் வேறு எங்கும் கிடையாது.
ஹாஜிகள் இந்த ஸ்தானத்தில் நின்று பாவ மன்னிப்பின் மூலம் அவர்களின் உள்ளம், உடல்களை எல்லாம் தூய்மைப் படுத்திய பிறகு இறைவனிடம் கை ஏந்தி இறைஞ்சும் போது, அவன் அதனை ஏற்றுக் கொள்கிறான். அது உலகில் பல்வேறு பாக்கியங்களும் அருளும் இறங்க காரணமாக அமைந்து விடுகிறது.
மேலும் அரபாவுடைய தினம் துஆக்கள் அங்கீகரிக்கப் படக் கூடிய நாளாகவும் விளங்குகிறது.
அரபா துஆவின் ஒழுங்குகள் சில :
அரபாவில் கேட்கப் படும் துஆவின் போது இரு கைகளையும் உயர்த்தி துஆ கேட்பது அதன் ஒழுங்குகளில் உள்ளதாகும்.  அரபாவில் இறைத் தூதர் (ஸல் லல்லா ஹு அலை ஹி வஸல்லம்) அவர்கள் தமது இரு கரங்களையும் நெஞ்சை நோக்கி உயர்த்தியவர்களாக ஒரு ஏழை பசிக்கு உணவு கேட்பது போன்று (கெஞ்சியவர்களாக) இறைவனிடம் துஆ கேட்பார்கள் என இப்னு அப்பாஸ் (ரழி யல்லா ஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம் : அபூ தாவூத்.
உள்ளத்தை தீய எண்ணங்கள், செயற்பாடுகளில் இருந்து முழுமையாக நீங்கியவர்களாக அரபா மைதானம் நோக்கி வந்து பரிசுத்தமான நிலையில் அங்கு நிற்பதும் அவசியமாகும். துஆவின் போது இறைவனுடன் மன்றாடி அழுவதற்கு முயற்சிக்க வேண்டும், அழுகை வராத சந்தர்பத்தில் அழுவது போன்று சிந்தனையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
அகப் பெருமை, ஆணவம் போன்ற தீய குணங்களில் இருந்தும் தவிர்ந்து கொண்டே துஆ கேட்க வேண்டும். ஏனெனில் அவை துஆக்கள் அங்கீகரிக்கப்பட தடையாக அமைந்து விடும். “(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமை யாகவும் நடக்காதே! அகப் பெருமைக் காரர், ஆணவங் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல் குர் ஆன்  31 : 18) என இறைவன் குறிப்பிடுகிறான்.
இந்த பெறுமதியான நேர காலங்களை வீண் பேச்சுக்கள் மற்றும் தேவைக்கு அதிகமாக உண்ணுதல், குடித்தல் மூலம் வீணடிக்கக் கூடிய ஹாஜிகளும் இருக்கத் தான் செய்கிறார்கள். எனவே இப்படியான நிலைகளை தவிர்த்தல் அவசியமாகும்.
சிரமத்துடன் அரபா தினத்தின் பகலின் ஆரம்பத்தில் துஆக்களில் ஈடுபட்டு விட்டு துஆக்கள் அங்கீரிக்கப் படக் கூடிய மாலை நேரம் வரும் போது பல ஹாஜிகள் துஆக்கள் கேட்காமல் இருந்து விடுகிறார்கள். இது தவறான செயற் பாடாகும்.
 துல் ஹஜ் ஒன்பதாம் நாள் ஹாஜிகள் அல்லாதோர் நோன்பு நோற்பது சுன்னத் ஆகும். துல் ஹஜ் ஒன்பதாம் நாள் நோற்கப் படும் நோன்பு அதற்கு முன் ஓராண்டில் செய்யப் பட்ட பாவங்களுக்கும், எதிர் வரும் இன்னுமொரு ஆண்டில் செய்யப் பட்ட பாவங்களுக்குமாக (இரு ஆண்டிற்கான) பரிகாரமாக அமையும் என நான் எதிர் பார்கிறேன் என இறைத் தூதர் (ஸல் லல்லா ஹு அலை ஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். நூல் : முஸ்லிம்.
ஹாஜிகள் அரபா நோன்பு நோற்பது கூடாது. அது மக்ரூஹான செயல் ஆகும். ஏனெனில் இறைத் தூதர் (ஸல் லல்லா ஹு அலை ஹி வஸல்லம்) அவர்கள் ஹாஜிகள் அரபாவில் நோன்பு நோற்பதை தடுத்துள்ளார்கள். (ஆதாரம் : அபூ தாவூத், ஹாகிம்)
அரபாவின் போது கேட்கப்படும் துஆ ஏனைய காலங்களில் கேட்கப்படும் துஆக்களை விட சிறந்ததாகும். ‘துஆக்களில் சிறந்தது அரபா நாளில் கேட்கப்படும் துஆவாகும். நானும் எனக்கு முந்தைய நபிமார்களும் கேட்ட துஆக்களில் மிகச் சிறந்தது, லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு, லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர் என்பதாகும்’ என நபி (ஸல் லல்லா ஹு அலை ஹி வஸல்லம்) அவர்கள் கூறியுள்ளார்கள் (நூல்: மாலிக், முஅத்தா, திர்மிதி).
அதன் பொருள் : அல்லாஹ்வைத் தவிர வணங்கி வழி பட தகுதி வாய்ந்த இறைவன் யாரும் இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு யாதொரு இணையும் இல்லை. ஆட்சி அதிகாரங்கள் அவனுக்கே சொந்தம், அனைத்துப் புகழும் அவனுக்கே உரியன. அவன் அனைத்து பொருட்களின் மீதும் ஆற்றல் உடையவன்.
அரபா தினத்தை விட இறைவன் தனது அடியார்களுக்கு அதிகம் நரக விடுதலை வழங்கும்  வேறு தினம் கிடையாது. அரபா தினத்தில் மக்களுக்கு நெருக்கமாக இறைவன் வந்து (அரபாவில் ஒன்று கூடி உள்ள தனது அடியார்கள் மீது) மகிழ்ச்சிக் கொண்டவனாக “இவர்கள் என்ன நாடுகிறார்கள்?” என தனது மலக்கு மார்களிடம் பெருமையுடன் கேட்பான்... (நூல்: முஸ்லிம்)
அரபாவுடைய நாளில் இறைவன் பெரும் பெரும் பாவங்களை எல்லாம் மன்னிப்பதையும், அவனின் அருள்கள் அதிகளவில் இவ்வுலகை நோக்கி இறங்குவதையும் பார்க்கும் ஷைத்தான் அந்நாளில் சிறுமை அடைந்தவனாகும், தோல்வி அடந்தவனா கவும், இழிவடைந்தவனாகவும், கடும் சினம் கொண்டவனாகவும் காணப்படுவான். ஷைத்தா னுக்கு இது போன்ற ஒரு நிலை பத்ர் யுத்தத்தின் போது ஏற்பட்டுள்ளது. வானவர்களின் அணியை ஜிப்ரீல் (அலை ஹிஸ் ஸலாம்) அவர்கள் ஒழுங்கு படுத்துவதை கண்டமையே அதற்கு காரணம்.

ஹஜ்ஜின் வாஜிப்கள் :
1.    இஸ்லாம் நிர்ணயித்துள்ள மீகாத்களை கடக்க முன்னர் இஹ்ராம் செய்தல்.
2.    சூரியன் உச்சியில் இருந்து சாய்ந்ததில் இருந்து (ழுஹர் நேரம்) சூரியன் மறையும் வரையிலான காலப் பகுதியில் அரபாவில் தரிப்படுதல். ஒருவர் சூரியன் மறைவதற்கு முன்னர் அரபாவில் இருந்து சென்று பிறகு திரும்பி வரவில்லை என்றால் அதற்கு பரிகாரமாக ஒரு ஆட்டை அறுத்து பலியிட வேண்டும்.
3.    துல் ஹஜ் பத்தாம் நாள் அரபாவில் இருந்து திரும்பி முஸ்தலிபாவில் இரவு தங்குதல். முஸ்தலிபாவில் எப்பகுதியிலும் தங்கலாம். சக்தி உடையவர்கள் முஸ்தலிபாவில் பஜ்ர் தொழுகை யை நிறை வேற்றுவது அவசியமாகும்.

யார் எம்முடன் சேர்ந்து இந்த தொழுகையை (முஸ்தலிபாவில் பஜ்ர்) தொழுகையை தொழுது விட்டு நாம் மினாவுக்கு செல்லும் வரை எம்முடன் இங்கு (முஸ்தலிபாவில்) இருந்தார் களோ, அதற்கு முன்னர் இரவிலோ பகலிலோ அரபாவில் தரிப்பட்டிருந்தால் அவரது ஹஜ் ஏற்றுக் கொள்ளப் படும். அவர் ஹஜ்ஜின் பிரதான கடமைகளை நிறை வேற்றியவராக கருதப் படுவார் என இறைத் தூதர் (ஸல் லல்லா ஹு அலை ஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக உர்வா பின் முதர்ரிஸ் அத் தாஈ (ரழி யல்லா ஹு அன்ஹு) அவர்கள் அறிவித்தார்கள். (ஆதாரம் : அஹ்மத், அபூ தாவூத், நசாஈ, இப்னு மாஜாஹ், திர்மிதி)
(ஹஜ்ஜின் போது) உங்கள் இறைவனுடைய அருளை நாடுதல் (அதாவது வியாபாரம் போன்றவற்றின் மூலமாக நேர்மையான பலன்களை அடைதல்) உங்கள் மீது குற்ற மாகாது; பின்னர் அரஃபாத்திலிருந்து திரும்பும் போது “மஷ் அருள் ஹராம்” என்னும் தலத்தில் அல்லாஹ்வை திக்ரு (தியானம்) செய்யுங்கள்; உங்களுக்கு அவன் நேர்வழி காட்டியது போல் அவனை நீங்கள் திக்ரு செய்யுங்கள். நிச்சயமாக நீங்கள் இதற்கு முன் வழி தவறியவர்களில் இருந்தீர்கள். (அல் குர்ஆன், 2: 198) என இறைவன் குறிப்பிடுகிறான்.
அதே வேளை இறைத் தூதர் (ஸல் லல்லா ஹு அலை ஹி வஸல்லம்) அவர்கள் ஹஜ்ஜின் போது முஸ்தலிபாவில் பஜ்ர் தொழுதுள்ள துடன், தான் செய்த முறைப் படியே ஹஜ் கடமையை நிறை வேற்றுமாறு எங்களுக்கும் பணித்துள்ளார்கள். (ஆதாரம் : முஸ்லிம், நாஸாஈ)
மேலும், இன்னுமொரு ஹதீஸில் சூரியன் உதிக்கும் வரை ஜம்ராவுக்கு கல் எறிய செல்ல வேண்டாம் எனவும் பணித்துள்ளார்கள். (ஆதாரம்: அஹ்மத், அபூ தாவூத், இப்னு மாஜாஹ், திர்மிதி)
இதன் அடிப்படையில், முஸ்தலிபாவில் பஜ்ர் தொழாமல் அங்கிருந்து நகர வேண்டாம் என எனது முஸ்லிம் சகோதரர்களை வலியுறுத்து கிறேன்.  அங்கே அல்லாஹ்வை திக்ர் (தியானம்) செய்தவர்களாகவும், பணிவுடன் ஆல்லாஹ்விடம் துஆ கேட்டவர்களாகவும், பாவ மன்னிப்பு தேடியவர்களாகவும், தல்பியா கூரியவர்களாகவும் பஜ்ர் வரை இருப்பது அவசியமாகும். நோய், வயோதிபம் போன்ற காரணங்களினால் பலகீன மானவர்கள் சந்திரன் மறைந்த பிறகு அங்கிருந்து செல்ல முடியும். சந்திரன் மறையும் வரை அவர்கள் அங்கு தங்குவது வாஜிப் ஆகும்.  பலகீனமான வர்கள் நள்ளிரவு வரை தங்குவது வாஜிப் என சில அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதற்கு முன்னர் அரபாவில் இருந்து அவர்கள் நகர்ந்து விட்டால் அதற்கு பகரமாக ஒரு ஆட்டை அறுத்து பலியிட்டு (தம்)  கொடுக்க வேண்டும்.
4.    ஜம்ராக்களுக்கு கல் எறிதல். துல் ஹஜ் ஒன்பதாம் நாள் இரவு சந்திரன் மறைந்தது முதல் துல் ஹஜ் பத்தாம் நாள் சூரியன் மறையும் வரை பெரிய ஜம்ரா (ஜம்ரத்துல் அகபா)வுக்கு கல் ஏறிய முடியும்.
அய்யாமுத் தஷ்ரீக் தினங்களில் சூரியன் உச்சியில் இருந்து நீங்கியது முதல் சூரியன் மறையும் வரை மூன்று ஜம்ராக்களுக்கும் கல் ஏறிய வேண்டும். அந்த குறிப்பிட்ட நேரத்தில் ஜம்ராக்களுக்கு கல் ஏறிய முடியாமல் போனால் அடுத்த நாள் எறிவதில் குற்றம் இல்லை.
5.    யவ்முன் நஹ்ர் தினம் (துல் ஹஜ் பத்தாம் நாள்) பெரிய ஜம்ரா (ஜம்ரத்துல் அகபா) வுக்கு கல் ஏறிந்த பிறகு தலை முடியை மழித்தல் அல்லது கத்தரித்தல்.
6.    துல் ஹஜ் மாதத்தின் 11 ம் நாள் மற்றும் 12 நாளும், அடுத்த நாள் இருந்து தங்கி செல்ல விரும்புகிறவர்கள் 13 ம் நாளும் மினாவில் இரவு தங்குதல்.
7.    (தவாபுல் வதாஅ) இறுதி தவாபை நிறை வேற்றல்.
வாஜிப்களில் ஒன்றை ஒருவர் தவற விட்டு விட்டால் அதற்கு பரிகாரமாக ஒரு ஆட்டை அறுத்து பலியிட வேண்டும்.
ஹஜ்ஜின் சுன்னத்துக்கள் :
1.    தர்வியா தினமான துல் ஹஜ் மாதத்தின் எட்டாம் நாள் ழுஹருக்கு முன் மினாவை நோக்கி புறப் படல். அங்கு ழுஹர், அஸர், மஃரிப், இஷா மற்றும் அடுத்த நாள் ஃபஜ்ர் ஆகிய ஐந்து தொழுகை களையும் நிறை வேற்றல். நான்கு ரகஅத் உடைய தொழுகைகளை மாத்திரம் இரண்டிரண்டு ரகஅத்களாக சுருக்கி தொழுதல்.
2.    துல் ஹஜ் மாதத்தின் ஒன்பதாம் நாள் முந்திய இரவும் மினாவில் தங்கிவிட்டு  சூரியன் உதித்தவுடன் அரபாவை நோக்கி புறப் படல்.
3.    நமிரா எனுமிடத்தில் ழுஹர், அஸர், ஆகிய தொழுகைகளை சேர்த்தும், சுருக்கி இரண்டிரண்டு ரகஅத்களாகவும் ஜமாஅத் ஆக இமாமுடன் தொழுதல்.
4.    ழுஹர், அஸர், ஆகிய தொழுகைகளை நிறை வேற்றிய பிறகு அரபா மைதானத்தை நோக்கி செல்லுதல். அங்கே அல்லாஹ்வை திக்ர் (தியானம்) செய்தவர்களாகவும், பணிவுடன் ஆல்லாஹ்விடம் துஆ கேட்டவர்களாகவும் சூரியன் மறையும் வரை இருத்தல். அதிகதிகம் பாவ மன்னிப்பு தேடியவர் களாகவும், பணிவுடனும், பச்சாதாபத்துடனும், எமது பலவீனத்தையும் தேவைகளையும் வெளிப் படுத்தியவர்களாக இறைவனிடம் இறைஞ்ச வேண்டும்.
5.    நடைகளில் அவசரத்தைத் தவிர்த்து, அமைதியை கடைப் பிடித்தல். “மனிதர்களே அமைதியை கடைப் பிடியுங்கள், ஏனெனில் அவசரம் நல்ல செயல் அல்ல” என இறைத் தூதர் (ஸல் லல்லா ஹு அலை ஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
6.    மினா செல்லும் போதும், அரபா செல்லும் போதும், முஸ்தலிபா செல்லும் போதும், மீண்டும் மினா வரும் போதும் அதிகமதிகம் தல்பியா கூறுதல். ஜம்ரத்துல் அகபாவுக்கு கல் ஏறியும் போது தல்பியா கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
7.    முஸ்தலிபா செல்லும் வரை மஃரிப், இஷா ஆகிய தொழுகைகளை பிற்படுத்துதல். அங்கே அவ்விரு தொழுகைகளை சேர்த்தும், இஷா தொழுகையை சுருக்கி இரண்டு ரகஅத்களா கவும் தொழுதல்.
8.    முஸ்தலிபாவில் மஷ்அருல் ஹராம் எனும் இடத்தில் பஜ்ர் தொழுகையை நிறை வேற்றிய பிறகு, வெளிச்சம் வரும் வரை கிப்லாவை முன்னோக்கி நின்றவர்களாக திக்ரிலும், துஆ விலும் ஈடு படல்.
9.     வெளிச்சம் வந்த பிறகு சூரியன் உதிக்க முன் முஸ்தலிபாவில் இருந்து நகர்தல்.
10.    மஹ்சர் எனும் பள்ளத் தாக்கு அமைந்துள்ள இடத்தை அண்மிக்கும் போது முடயுமானால் அவசர அவசரமாக நகர்ந்து செல்லுதல்.
11.    சூரியன் உதயமானப் பிறகு உச்சியில் இருந்து நீங்குவதற்கிடையில் ஜம்ரத்துல் அகபாவுக்கு கல் எறிதல்.
12.    ஒவ்வொரு கல் எறிதலின் போதும் அல்லாஹு அக்பர் என கூறுவது.
13.     ஜம்ரத்துல் அகபாவுக்கு கல் எறிதல், அதன் பிறகு பிராணிகளை அறுத்தல், அதனை அடுத்து தலை முடியை மழித்தல், அதனைத் தொடர்ந்து தவாபுல் இபாலாவையும் மேற் குறிப்பிடப் பட்ட வரிசைப் படி ஒன்றன் பின் ஒன்றாக  நிறைவேற்றல்.
14.    துல் ஹஜ் பத்தாம் நாளான யவ்முன் நஹ்ர்  தினத்தில் சூரியன் மறைய முன்னர்  தவாபுல் இபாலாவை நிறைவு செய்தல்.
15.    குர்பானிகளை அதனை நிறை வேற்றுபவர் நேரடியாக அறுத்தல் அல்லது அறுக்கும் இடத்திற்கு செல்லுதல்.
16.    குர்பானிகளில் இருந்து உண்ணுதல். இறைத் தூதர் (ஸல் லல்லா ஹு அலை ஹி வஸல்லம்) அவர்களும் அவர்களது குர்பானியில் இருந்து சாப்பிட்டு உள்ளார்கள்.
17.    அய்யாமுத் தஷ்ரீக் உடைய நாட்களில் ஜம்ராக்களுக்கு கல் ஏறிய செல்லும் போது நடந்து செல்லுதல்.
18.    முதல் ஜம்ரா மற்றும் இரண்டாம் ஜம்ராக்களுக்கு கல் எறிந்த பிறகு கிப்லாவை முன்னோக்கி நின்று இறைவனிடம் துஆ  கேட்டல். மூன்றாம் ஜம்ராவுக்கு கல் எறிந்த பிறகு துஆ கேட்பது முஸ்தஹப் அல்ல. இறைத் தூதர் (ஸல் லல்லா ஹு அலை ஹி வஸல்லம்) அவர்கள் அதற்கு கல் எறிந்த பிறகு துஆ கேட்காது திரும்பியதாக செய்திகள் உள்ளன.
குறிப்பு :
பின் வரும் மூன்று கடமைகளில் இரண்டை நிறை வேற்றி விட்டால் இஹ்ராமில் இருந்து நீங்கி விடுவதில் உள்ள இரு நிலைகளில் முதல் நிலையை அடைந்து விடலாம்.
அவை ஜம்ரத்துல் அகபாவுக்கு கல் எறிதல், தலை முடியை மழித்தல், தவாப் செய்தல் ஆகியனவாகும்.
நீங்கள் ஜம்ராவுக்கு கல் எறிந்து, தலை முடியையும் மழித்து விட்டால் மனைவியுடன் உடல் உறவு கொள்வதைத் தவிர, நறுமணம் பூசுவது, தைத்த ஆடைகள் அணிவது உள்ளிட்ட தடை செய்யப் பட்டிருந்த அனைத்தும் உங்களுக்கு ஹலால் ஆகி விடும் என இறைத் தூதர் (ஸல் லல்லா ஹு அலை ஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக ஆஇஷா (ரழி யல்லா ஹு அன்ஹா) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம் : அஹ்மத்)
நபித் தோழர்கள் உட்பட அனைத்து அறிஞர்களும் இந்த கருத்தைக் கொண்டே அமல் செய்துள்ளதாக இமாம் திர்மிதி குறிப்பிட்டுள்ளார்.
இஹ்ராமுடன் உள்ளவர் யவ்முன் நஹ்ர் (துல் ஹஜ் 10) தினம் ஜம்ராவுக்கு கல் எரிந்து விட்டு, பலிப் பிராணியை அறுத்தவுடன் தலை முடியை மழித்தால் அல்லது கத்தரித்தால்  மனைவியுடன் உடல் உறவு கொள்வதைத் தவிர தடை செய்யப் பட்டிருந்த அனைத்தும் ஹலால் ஆகி விடும் என அறிஞர்கள் கருதுவதாக மேலும் இமாம் திர்மிதி சுட்டி காட்டுகிறார்.
தமத்துஃ மற்றும் கிரான் முறையில் ஹஜ் செய்கின்றவர்கள் வழங்க வேண்டிய “ஹத்யு” (பலிப் பிராணி) யை சூரியன் உதயமான பிறகே அறுக்க வேண்டும். பாஜ்ருக்கு முன் கல் எறிந்து விட்டாலும் சூரியன் உதிக்கும் வரை காத்திருந்தே அறுக்க வேண்டும்.
முக்கியமாக அவதானிக்கப் பட வேண்டிய சில விடயங்கள் :
    நன்மை தரும் செயல் என கருதி அரபாவில் அமைந்துள்ள “ஜபல் அர் ரஹ்மா” (மலை) யில் ஏறுவது பித் அத் ஆகும். இறைத் தூதர் (ஸல் லல்லா ஹு அலை ஹி வஸல்லம்) அவர்களோ, அவர்களின் தோழர்களில் எவருமோ, அவர்களைத் தொடர்ந்து வந்த “ஸலப் அஸ் ஸாலிஹீன்களில்”  எவருமோ நன்மை தரும் செயல் என கருதி அரபாவில் அமைந்துள்ள “ஜபல் அர் ரஹ்மா” (மலை) யில் ஏறியதாக எந்த செய்தியும் இல்லை. இறைத் தூதர் (ஸல் லல்லா ஹு அலை ஹி வஸல்லம்) அவர்கள் மலையின் அடியில் நின்று கொண்டே “இங்கு நான் நின்ற போதிலும் அரபா முழுவதும் நிற்பதற்கு பொருத்தமான இடமாகும் என குறிப்பிட்டார்கள். (ஆதாரம் : முஸ்லிம்)
    தலை முடியை முழுமையாக மழித்தல் கத்தரிப்பதை விட சிறந்தது. தலை முடியை கத்தரிக்கும் போது தலை முழுவதிலும் இருந்து கத்தரிக்கப்படுவது அவசியமாகும். ஒரு சில முடிகளை வெட்டி விடுவது செல்லுப் படி ஆக மாட்டாது.
    ஜம்ராக்களுக்கு கல் எறிவதற்காகவும், அல்லாஹ்வை திக்ர் செய்வதற்காகவும் மினாவில் பகல் வேளைகளில் தங்குவதை தவிர்த்தல் தவறாகும். அது வாஜிப் இல்லாத போதிலும் சுன்னத் ஆகும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
    மினா, அரபா, முஸ்தலிபா ஆகிய இடங்களில் ஐங்கால தொழுகைகளையும் சிறு, சிறு குழுக்களாக இணைந்து தொழுதல் சுன்னாவுக்கு முரணான செயலாகும். முடியுமான அளவிற்கு ஒன்றிணைந்து பெரிய ஜமாஅத் ஆக தொழ வேண்டும். அதற்கு முடியாமல் போனால் சிறிய குழுக்களாக இணைந்து தொழுவத்தில் தவறு இல்லை.
    இஹ்ராத்துடன் இருப்பதையும், ஹஜ் கடமைகளை நிறை வேற்றுவதையும் பலர் போட்டோ பிடிப்பதை அவதானிக்கின்றோம். போட்டோ பிடிப்பது எப்போதும், எந்த இடத்திலும் ஹராமானதாகும். ஹஜ் கடமையின் இவ்வாறு அந்த குற்றம் தீவிரமானதாக கருதப் படும். மேலும் வரம்பு மீறிய செயலாகவும் அமைந்து விடும். இறை வன் பின் வருமாறு குறிப்பிடுகிறான்: நிச்சயமாக எவர் நிராகரித்துக் கொண்டும் உள்ளூர் வாசிகளும் வெளியூர் வாசிகளும் சமமாக இருக்கும் நிலையில் (முழு) மனித சமுதாயத்திற்கும் எதனை (புனிதத் தலமாக) நாம் ஆக்கி யிருக்கிறோமோ அந்த மஸ்ஜிதுல் ஹராமை விட்டும், மேலும் அல்லாஹ்வுடைய பாதையை விட்டும், தடுத்துக் கொண்டும் இருந்தார்களோ அவர்களுக்கும் மேலும் யார் அதிலே (மஸ்ஜிதுல் ஹராமில்) அநியாயம் செய்வதன் மூலம் வரம்பு மீற விரும்புகிறானோ அவனுக்கும் நோவினை தரும் வேதனையிலிருந்து சுவைக்கும் படி நாம் செய்வோம். (அல் குர்ஆன் 22 : 25)
    நன்மையை ஏவி தீமையை தடுக்கும் முக்கிய பணியை ஹாஜிகளில் பலர் தவற விட்டு விடுகின்றனர். நன்மையை ஏவி தீமையை தடுப்பதற்கு சக்தி இருந்தால் அந்த பணியை செய்வதால் குழப்பங்கள் தோன்றாத நிலையில் அந்த பணியை தவற விடுவது எப்போதும் குற்றச் செயலாகும். அல்லாஹ் சங்கைப் படுத்தியுள்ள பிரதேசத்தில் அந்த உயரிய பணியை கை விடுவது அந்த குற்றத்தின் அளவை அதிகரிக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
    ஹாஜிகளில் பலர் தமது சக ஹாஜிகளுடன் வீண் தர்க்கங்களிழும் சண்டை சச்சரவுகளிலும் ஈடுபடு வதை அவதானிக்க முடிகிறது. இது ஹாஜிகளுக்கு வழங்கப் படும் பல்வேறு நன்மைகளை அடையாமல் தடை செய்வதற்காக சைத்தான் மேற்கொள்ளும் சூழ்ச்சியாக இருக்கின்றது.
மோசமான காரியங்கள் மற்றும் பாவமான செயல்களில் ஈடுபடாமல் ஒருவன் அல்லாஹ் வுக்காகவே ஹஜ் செய்தால் அவன் அவனது தாய் அவனைப் பெற்றெடுத்த நாளில் இருந்ததைப் போன்று (பாவமறியாத பாலகனாக) திரும்புவான்” என்று அல்லாஹ் வின் தூதர் (ஸல் லல்லாஹு அலை ஹி வஸல்லாம்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) , நூல் : புகாரி.
எனவே ஹாஜிகள் வீண் தர்கங்கள் சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவதை தவிர்ப்பதோடு, புறம் பேசுதல், கோள் மூட்டுதல், சிகரட் பாவித்தல் உள்ளிட்ட பாவங்கள் போன்ற மோசமான காரியங்களையும் தவிர்க்க வேண்டும்.
ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும்; எனவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம், கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு - ஆகியவை செய்தல் கூடாது; நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தவனாகவே இருக்கிறான்; மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட் களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்; நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்ப வற்றுள் மிகவும் கைரானது (நன்மையானது), தக்வா (என்னும் பயபக்தியே) ஆகும்; எனவே நல்லறிவுடையோரே! எனக்கே பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள். (அல் குர்ஆன் 2 : 197)
ஹாஜிகளே! உங்களுக்கும், எனக்கும் தக்வாவைக் கொண்டு நல்லுபதேசம் செய்கின் றேன். தக்வாவைக் கடைப் பிடிப்பது நஷ்டம் தராத வியாபாரமாகும். இறைவன் எமது சிறிய, பெரிய மற்றும் உள்ளங்கள் மறைத்து வைத்துள்ள அனைத்து காரியங்களையும் அறிகிறான். எனவே சோம்பலை கைவிட்டு அவனை வழிப் பட முயற்சி செய்யுங்கள். பர்ழான மற்றும் சுன்னத்தான தொழுகைகளை பேணுதலாக நிறை வேற்றுங்கள். சோதனைகள், பிரச்சினைகள், துன்பங்கள், துயரங்களின் போதெல்லாம் அல்லாஹ்வின் பால் விரையுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு பாதுகாப்பு அளிப்பான்.
முதல் நிலைக் கடமைகளில் மூன்றாவது : தவாபுல் இபாழா
இது ஹஜ்ஜின் தவாப் ஆகும். அல்லாஹ்வை வழிப்படும் எண்ணத்துடன் கஃபாவை எழு முறை வளம் வருவதே தவாப் எனப் படுகிறது. முஸ்தலிபாவில் இரவு தங்கியதை அடுத்து, சந்திரன் மறைந்த பிறகு தவாபுல் இபாழாவை நிறை வேற்றுவதற்கான நேரம் வந்து விடும். எனினும் யவ்முன் நஹ்ர் (துல் ஹஜ் 10 ம்) நாளில் அதனை நிறை வேற்றுவது சிறந்தது ஆகும். அதனை பிற்படுத்தி நிறை வேற்றுவதும் கூடும். மினாவில் தங்கி இருக்கும் நாள்களின் நிறைவேற்றாது பிற்படுத்தி வேறொரு தினத்தில் நிறை வேற்றுவதில் குற்றம் இல்லை. அதற்கு  சரத்துகளும், சுன்னத்துக்களும், மக்ரூஹான காரியங்களும் உள்ளன.
தவாபின் சரத்துக்கள் (நிபந்தனைகள்) :
1.    தவாபை ஆரம்பிக்கும் போது நிய்யத் வைத்தல்; ஏனெனில் அமல்கள் அனைத்துக்கும் நிய்யத்தை அடிப்படையாக வைத்தே  கூலி வழங்கப் படுகிறது. எனவே தவாபை நிறை வேற்றும் போதும் நிய்யத் வைப்பது அவசியமாகும். அதாவது தவாபின் போது இறைவனுக்கு வழிப்பட்டு தவாபை நிறை வேற்றுவதாக உள்ளத்தில் எண்ணம் கொள்வதையே நிய்யத் வைத்தல் என்பதன் மூலம் நாடப் படுகிறது.
2.    தவாபின் போது அழுக்குகளில் இருந்து தூய்மையாக இருப்பதுடன், வுழூ செய்வதும் அவசியமாகும்.
“அல்லாஹ்வின் இல்லத்தை தவாப் செய்வதும் தொழுகையாகும். எனினும் தவாபில் உங்களுக்கு பேசுவதற்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது. உங்களில் எவரும் தவாபின் போது பேசினால் நல்லதையே பேசட்டும்” என இறைத் தூதர் (ஸல் லல்லா ஹு அலை ஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.  (ஆதாரம் : அஹ்மத், திர்மிதி, இப்னு ஹிப்பான், இப்னு ஹுஸைமாஹ்)
3.    அவ்ரத்தை மறைத்தல்.
“அல்லாஹ்வின் இல்லத்தை நிர்வாணத்துடன் தவாப் செய்யக் கூடாது” என இறைத் தூதர் (ஸல் லல்லா ஹு அலை ஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.  (ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)
4.    தவாப் செய்பவரின் இடது பக்கத்தில் கஃபா அமைதல். “இறைத் தூதர் (ஸல் லல்லா ஹு அலை ஹி வஸல்லம்) அவர்கள் மக்காவுக்கு வந்த போது, (தவாப் செய்ய வந்த போது) ஹஜருல் அஸ்வதை தொட்டார்கள், பிறகு அவர்களது வலது பக்கமாக நடந்து சென்றார்கள். அவசர அவசரமாக மூன்று சுற்றுக்களும், சாதரணமாக நான்கு சுற்றுக்களும் வளம் வந்தார்கள்”. (ஆதாரம் : முஸ்லிம்)
5.    ஹஜருல் அஸ்வதில் இருந்து தவாபை ஆரம்பித்து, ஏழு சுற்று வருதல். ஏழு சுற்றுக்களில் சிறிதளவேனும் விடுப்படு மெனில் அந்த தவாப் நிறை வேறாது.

தவாபின் சுன்னத்துக்கள் :
1.    கஃபாவை காணும் போது துஆவுக்காக கைகளை உயர்த்துவது போன்று இரு கரங்களையும் உயர்த்தி, பின் வரும் துஆவை கேட்பது அவசியமாகும். “அல்லா ஹும்ம அன்தஸ் ஸலாம், வமின் கஸ் ஸலாம், ஹய்யினா ரப்பனா பிஸ் ஸலாம், அல்லா ஹும்ம ஸித் ஹாதல் பைத தஃளீமன், வ தஷ்ரீபன், வ தக்ரீமன், வ மஹாபதன், வ பிர்ரன்”. (ஷாபிஈ, தபரானி)
2.    ஆண்கள் மாத்திரம் மக்கா சென்றதும் செய்யும் தவாஃபில்  ‘இழ்திபாஃ’ எனப்படும் முறையில் இஹ்ராம் ஆடையை மாற்றிக் கொள்வது ஸுன்னத்தாகும்.
ஆடையின் மத்தியை வலது புஜத்தில் கீழ் போட்டு வலது புஜம் வெளியில் தெரியுமாறும், ஆடையின் இரு ஓரங்களையும் இடது புஜத்தின் மேலும் போடுவவதே ‘இழ்திபாஃ’ எனப் படுகிறது.
3.    ஹஜருல் அஸ்வதை நெருங்கி அதனை முத்தமிட முடிந்தால் முத்தமிடல். அதற்கு முடியாமல் போனால் வலது கையினால் அதனை தொடுதல். அதற்கும் முடியாமல் போனால் ஹஜருல் அஸ்வதை நோக்கி வலது கையை மாத்திரம் உயர்த்துவது. தொழுகைக்கு இரு கைகளையும் உயர்த்துவது போன்று உயர்த்தக் கூடாது. சிலர் அறியாமையினால் இவ்வாறு செய்கின்றனர். இது பித்அத் ஆகும்.
4.    தவாபை ஆரம்பிக்கும் போது “பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்” எனக் கூறுவது. அதாவது, அல்லாஹ்வின் திரு நாமத்தின் மூலம் தவாபை ஆரம்பம் செய்கின்றேன். அல்லாஹ் அனைத்தையும் விட மிகப் பெரியவன் என்பதே அதன் பொருளாகும். வேறொரு ரிவாயத்தில், “லா இலாஹ இல்லல் லாஹு வல்லா ஹு அக்பர்” என்றும் வந்துள்ளது.
5.    தவாபின் முதல் மூன்று சுற்றுக்களிலும் “றமல்” சுன்னத்தாகும். காலடிகளை சிறியதாக எடுத்து வைத்து அவசர அவசரமாக நடந்து செல்வதே “றமல்” எனப் படும்.
6.    தவாபின் போது அதிகமாக “திக்ர்” செய்தல், துஆ கேட்டல், நபி (ஸல் லல்லா ஹு அலை ஹி வஸல்லம்) அவர்கள் மீது ஸலவாத்து சொல்லுதல். தவாபின் போது குறிப்பாக எந்த துஆவும் இல்லை. ஒவ்வொரு சுற்றுக்களின் இறுதியில் மாத்திரம், "ருக்னுல் யமானியில்” இருந்து ஹஜருல் அஸ்வதை அடையும் வரை பின்வருமாறு கூறுவது ஸுன்னத்தாகும் :
 “ரப்பனா ஆதினா ஃபித் துன்யா ஹஸனஹ், வஃபில் ஆகிரதி ஹஸனதவ் வகினா அதாபன் நார்”
இது தொடர்ப்பில் அப்துல்லாஹ் பின் ஸாஇப் (ரழி யல்லா ஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் அஹ்மது உள்ளிட்ட பல நூல்களில் பதிவு செய்யப் பட்டுள்ளது.
7.    தவாபின்   போது அல்லாஹ்வை அஞ்சி பயபக்தியுடனும், பணிவுடனும் நடந்து கொள்ளல். தவாப் என்பது தொழுகை என்பதால் தொழுகையில் கடைப் பிடிக்கும் அனைத்து விதமான அந்தரங்க மற்றும் வெளிப்படையான ஒழுக்கங்களையும் கடைப் பிடித்தல். கஃபாவின் மகத்துவத்தை உள்ளத்தில் எண்ணி பேணுதலுடன் நடந்து கொள்ளல்.
8.    தவாபை நிறை வேற்றி முடிந்த பிறகு மகாம் இப்ராஹீமுக்கு பின் நின்று இரண்டு ரக்அத்துகள் தொழுதல். அதன் பின் நின்று தொழ முடிய வில்லை என்றால், மஸ்ஜிதுல் ஹராமின் எப்பகுதியிலேனும் தொழுது கொள்ளலாம். முதல் ரக்அத்தில் சூரத்துல் காஃபிரூனும், இரண்டாவது ரக்அத்தில் சூரத்துல் இக்லாசும் ஓத வேண்டும். இது தொடர்பில் ஜாபிர் (ரழி யல்லா ஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் முஸ்லிமில் பதிவாகி உள்ளது.
சில முக்கிய குறிப்புக்கள் :
மார்க்கத்திற்கு முரணான பல்வேறு காரியங்களை சிலர் செய்து வருகின்றனர். அவை தொடர்ப்பில் அவதானமாக இருப்பதுடன் தவிர்ந்து கொள்வதும் அவசியமாகும்.
    தவாபிற்கான நிய்யத்தை நாவினால் மொழிதல். தொழுகை மற்றும் தவாபின் நிய்யத்துக்களை நாவினால் மொழிவது பித்அத் ஆகும்.
    ஹஜருல் அஸ்வத் மற்றும் ருக்னுல் யமானி ஆகியவற்றைத் தவிர்த்து கஃபாவின் ஏனைய கோணங்களையோ, பாகங்களையோ, மகாமு இப்ராஹீம் போன்ற பகுதிகளையோ தொடுவது, முத்தமிடுவது அனைத்தும் பித்அத் ஆகும். வணக்கம் என கருதி அதனை செய்தால் ஷிர்க் ஆகி விடும்.
    ஹஜருல் அஸ்வதை தொடுவதற்கோ, முத்தமிடு வதற்கோ பிறரை நெருக்கி கொண்டு முண்டி யடித்துக் கொண்டு செல்லுதல். “நீர் பலம் மிக்கவராக இருக்கின்றீர், ஹஜருல் அஸ்வதை அடையும் போது பிறரை நெருக்கிக் கொண்டு (முத்தமிடவோ, தொடவோ) செல்லாதீர். இதனால் பலகீனமானோர் சிரமப் படுவர். எனவே இட வசதி இருந்தால் மாத்திரம் தொடு என இறைத் தூதர் (ஸல் லல்லா ஹு அலை ஹி வஸல்லம்) அவர்கள் உமர் (ரழி யல்லா ஹு அன்ஹு) அவர்களிடம் கூறினார்கள். (அஹ்மத்)

ஹஜ்ருல் அஸ்வதை தொடுவது சுன்னத் ஆகும், ஆனால் பிறரை துன்புறுத்தாது இருப்பது வாஜிப் ஆகும். வாஜிபே முதன்மையாக நிறை வேற்றப் பட வேண்டும்.
பெண்களைப் பொறுத்த மட்டில் ஹஜருல் அஸ்வதிற்கு ஆண்களை நெருங்கிக் கொண்டு செல்வதை கண்டிப்பாக தவிர்ந்துக் கொள்ள வேண்டும்.
    நாவின் மூலம் அல்லது செயல் மூலம் பிறரை நோவினை செய்தல் ஹராம் ஆகும். விசேடமாக அல்லாஹ்வின் இல்லத்தில் பிறருடன் இரக்கத்து டனும், மிருதுவாகவும் நடந்து கொள்ளும் அதேவேளை தவறுகள் நிகழ்ந்து விட்டால் மன்னித்து விடவும் வேண்டும்.
    தவாபில் நல்லதைத் தவிர வேறு எதனையும் பேசுவதைத் தவிர்ந்து கொள்வதும் அவசியமாகும்.
தவாபின் மகரூஹ்கள் :
1.    தொழுகையைப் போன்று தவாபின் போதும் கை விரல்களை பிணைத்தல், மற்றும் விரல்களை முறித்தல் என்பன மக்ரூஹ் ஆகும்.
2.    சிறுநீர், மலம், காற்றை அடக்கி வைத்துக் கொண்டு அல்லது கடுமையான பசி உள்ள நிலையில் தவாப் செய்வதும் மக்ரூஹ் ஆகும். இது போன்ற நிலைகளில் தொழுவதும் மக்ரூஹ் ஆகும்.
3.    தவாப் செய்கின்றவர் பெண்களை பார்ப்பதை யும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
4.    தவாப் செய்யும் போது உடல் நிலை பலவீன மானவர்கள் மற்றும் அறிவில் குறைந்தவர்கள், அறியாமையினால் தவறுகள் செய்கின்ற வர்களை அவமதிக்கும் விதத்தில் நடந்து கொள்வதும் தவறாகும். தவறு செய்கின்ற வர்களை மிருதுவாக அணுகி திருத்த முயற்சி செய்ய வேண்டும்.
தவாபின் போது பெண்களைப் பார்ப்பது போன்று ஒழுக்கக் கேடுகளில் ஈடு பட்டவர்களின் தண்டனைகள் துரிதமாக இறக்கப் பட்டுள்ள சம்பவங்கள் பல வந்துள்ளன.
முதல் நிலைக் கடமைகளில் நான்காவது : ஸஃயு
சஃபா மற்றும் மறவா என்னும் மலைகளுக்கு மத்தியில் சுற்றி வருவதையே ஸஃயு என்று அழைக்கப் படுகிறது.
இறைவன் அல் குர்ஆனில் பின்வருமாறு கூறுகிறான்:
 إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ [البقرة: 158].
நிச்சயமாக “ஸஃபா”, “மர்வா” (என்னும் மலைகள் இடையே சுற்றி வருவது) அல்லாஹ்வின் கடமை களில் நின்றும் உள்ளன; (2 : 158)
“ஸஃபா”, “மர்வா” என்னும் மலைகள் இடையே சுற்றி வருவது கட்டாயக் கடமை என்பதை மேல் குறிப்பிடப் பட்டுள்ள இறை வசனம் தெளிவு படுத்துகிறது.
“அல்லாஹ்வின் இல்லத்தை தவாப் செய்வதோடு, “ஸஃபா” மற்றும் “மர்வா” மலைகளுக்கு இடையே சுற்றி வருவீராக” என்று இறைத் தூதர் (ஸல் லல்லா ஹு அலை ஹி வஸல்லம்) அவர்கள் அபூ மூஸா அல் அஷ் அரி (ரழி யல்லா ஹு அன்ஹு) அவர்களிடம் கூறினார்கள். (ஆதாரம் : முஸ்லிம்)
 “ஸஃபா” மற்றும் “மர்வா” மலைகளுக்கு இடையே ஸஃயு செய்வீராக, அல்லாஹ் ஸஃயு செய்வதை உங்களுக்கு கடமை ஆக்கி உள்ளான் என்று இறைத் தூதர் (ஸல் லல்லா ஹு அலை ஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக வேறு ஒரு ஹதீஸில் வந்துள்ளது.
ஸஃயின் விதிமுறைகள் :
1.    நிய்யத்;  அமல்கள் ஏற்றுக் கொள்ளப் படுவது நிய்யத்தை (எண்ணத்தை) வைத்து தான் என்று இறைத் தூதர் (ஸல் லல்லா ஹு அலை ஹி வஸல்லம்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே ஸஃயின் போதும் அல்லாஹ்வின் கட்டளைக்கு இணங்க அவனுக்கு வழிப் பட்டு அந்த கடமையை நிறை வேற்றுவதாக எண்ணம் கொள்ள வேண்டும்.
2.    ஏழு விடுத்தம் ஸஃயு செய்தல், “ஸஃபா” வில் இருந்து “மர்வா” வை நோக்கி செல்வது ஒரு விடுத்தமாகவும், மீண்டும் “மர்வா” வில் இருந்து “ஸஃபா” நோக்கி வருவது இன்னுமொரு விடுத்தமாகவும் கருதப் படும். ஸஃயில் ஒன்றையோ சிலதையோ நிறைவேற்ற தவறி விட்டால் ஸஃயு செல்லுபடியாகாது.
3.    கடமையான தவாபுல் இபாழா அல்லது சுன்னத்தான தவாபுல் குதூம் போன்ற தவாபை நிறைவேற்றிய பின்பே ஸஃயு செய்தல் வேண்டும்.
தவாபின் பின் நிறை வேற்றப் படும் ஸஃயே ஏற்றுக் கொள்ளப் படும் என்ற கருத்திலேயே அதிகமான அறிஞர்கள் இருக்கின்றனர். இறைத் தூதர் (ஸல் லல்லா ஹு அலை ஹி வஸல்லம்) அவர்களும் தவாபின் பின்பே ஸஃயை செய்துள்ளார்கள்.
ஸஃயின் சுன்னத்துக்கள் :
1.    தவாபை நிறை வேற்றிய உடனே ஸஃயையும் செய்தல்; அங்கீகரிக்கப்பட்ட காரணங்கள் இன்றி தவாபை நிறை வேற்றிய பிறகு ஸஃயை பிற்படுத்தல் கூடாது.
2.    “ஸஃபா” மற்றும் “மர்வா” மலைகளில் ஏறி துஆ கேட்டல். “அல்லாஹு அக்பர்” என்று மூன்று விடுத்தம் கூறுதல்.
இறைத் தூதர் (ஸல் லல்லா ஹு அலை ஹி வஸல்லம்) அவர்கள் “ஸஃபா” வை நெருங்கிய போது “இன்னஸ் ஸஃபா வல் மர்வா மின் ஷஆஇரில்லாஹ்” என்ற இறை வசனத்தை ஓதினார்கள். பிறகு அல்லாஹ் ஆரம்பித்து கூறியுள்ளதைக் கொண்டு நானும் ஆரம்பிக் கின்றேன் என்று கூறியவர்களாக “ஸஃபா” மலையில் ஏறினார்கள். அதன் பிறகு கிப்லாவை முன்னோக்கி நின்று தக்பீர் கூறியவர்களாக பின் வருமாறு கூறினார்கள் :
“லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு, லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர், லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு, அன்ஜஸ வஃதஹ், வ நசர அப்தஹ், வ ஹஸமல் அஹ்ஸாப வஹ்தஹ்.”
அதன் பிறகு துஆ கேட்டார்கள். அதைப் போன்று மூன்று விடுத்தம் கூறினார்கள். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து இறங்கி “மர்வா” மலையை அடைந்ததும் “ஸஃபா” வில் செய்ததையே செய்தார்கள் என ஜாபிர் (ரழி யல்லா ஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : முஸ்லிம்)
தொழுகையில் கையை உயர்த்தி தக்பீர் கூறுவது போன்று “ஸஃபா” மற்றும் “மர்வா” மலைகளில் கையை உயர்த்துவது கூடாது.
3.    “ஸஃபா” மற்றும் “மர்வா” மலைகளுக்கு இடையில் ஏற்கனவே பள்ளத்தாக்கு அமைந்திருந்த இடமான பச்சை நிற அடையாளம் இடப் பட்டுள்ள பகுதியை அடையும் போது வேகமாக நடந்து செல்வதும் சுன்னத் ஆகும்.
4.    ஸஃயை நிறை வேற்றுகின்றவர் அல்லாஹ் வுடன் அவரது பணிவையும், தனது நேர் வழிக்கும், நிலைமைகள் சீரடையவும், உளத் தூய்மை பெறவும் அல்லாஹ்வின் பால் உள்ள தேவையையும் உணர்ந்து செயல் படல்.
5.    அல்லாஹ்வை அதிகதிகம் திக்ர் செய்தல், பிரார்த்தனை செய்தல், நபி (ஸல் லல்லா ஹு அலை ஹி வஸல்லம்) அவர்கள் சலவாத்து கூறல்.
அல்லாஹ்வின் திக்ரை நிலை நாட்டுவதற்கே அவனது இல்லத்தை தவாப் செய்தல், ஸஃயு செய்தல், ஜம்ராவுக்கு கல் எறிதல் உள்ளிட்ட வணக்கங்கள் கடமையாக்கப் பட்டுள்ளன என இறைத் தூதர் (ஸல் லல்லா ஹு அலை ஹி வஸல்லம்) அவர்கள் கூரினார்கள். ஆதாரம் : அஹ்மத், அபூ தாவூத், திர்மிதி.

முக்கிய குறிப்புக்கள்
1.    தவாபுல் வதாஃவும் ஹஜ் மற்றும் உம்ராவின் வாஜிப்களில் ஒன்றாகும். மாத விடாய், பிரசவ உதிரப் போக்கு ஏற்பட்டுள்ள பெண்களுக்கு அதனை விடுவதற்கு அனுமதி உள்ளது.
மக்கள் மக்காவை விட்டு தமது ஊர்களுக்கு திரும்பி செல்ல ஆரம்பித்த போது, இறுதியில் கஃபாவை தவாப் (தவாபுல் வதாஃ) செய்யாது திரும்பி செல்ல வேண்டாம் என இறைத் தூதர் (ஸல் லல்லா ஹு அலை ஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரழி யல்லா ஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின் றார்கள். ஆதாரம் : முஸ்லிம்.
ஊர்களுக்கு திரும்பி செல்ல முன்னர் இறுதியில் கஃபாவை தவாப் (தவாபுல் வதாஃ) செய்யுமாறு பணித்த இறைத் தூதர் (ஸல் லல்லா ஹு அலை ஹி வஸல்லம்) அவர்கள் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுக்கு சலுகை வழங்கினார்கள் என இப்னு அப்பாஸ் (ரழி யல்லா ஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம் : புகாரி, முஸ்லிம்.
தவாபுல் இபாழா (ஹஜ்ஜின் தவாப்) வை ஒருவர் பிற்படுத்தி ஊருக்கு திரும்ப முன்னர் இறுதியில் நிறை வேற்றினால் அது போதுமானதாகும். மீண்டும் தவாபுல் வதாஃ வை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
2.    நபி (ஸல் லல்லா ஹு அலை ஹி வஸல்லம்) அவர்களின் கப்ரையையோ, ஏனையவர்களின் கப்ருகளையோ தரிசிப்பதற்காக மாத்திரம் மக்காவில் இருந்து மதீனா நோக்கி செல்லுதல் தவறாகும். அதேபோன்று மூன்று மஸ்ஜித் களைத் தவிர ஏனைய மஸ்ஜித்களில் தொழுவதற்காகவும் பயணம் செய்வதும் தவறாகும்.
மூன்று பள்ளிகளைத் தவிர வேறு எங்கும் புனிதப் பயணம் மேற் கொள்ளக் கூடாது. அவை: மஸ்ஜிதுல் ஹராம், எனது இந்தப் பள்ளி, மஸ்ஜிதுல் அக்ஸா வாகும் என  இறைத் தூதர் (ஸல் லல்லா ஹு அலை ஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
3.    ஹஜ்ஜுடைய நாட்களில் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் அரபா நாளின் பஜ்ர் நேரத்தில்  துவங்கி அய்யாமுத் தஷ்ரீக் நாட்கள் முடியும் வரை தக்பீர் கூறுவது சுன்னத் ஆகும்.
முடிவுற்றது